வேளாங்கண்ணி திருவிழா: திருச்சி, தஞ்சையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்

பதிவு செய்த நாள் : 26 ஆகஸ்ட் 2018 18:47

திருச்சி,

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு திருச்சி, தஞ்சாவூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா ஆகஸ்ட் 29–ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மாதா கோவில் விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் திருச்சியில் இருந்து 29–ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் மாதம் 8–ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இரவு 10:20 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரயில், அதிகாலை 3.15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்

இதுமட்டும் அல்லாமல், தஞ்சாவூரில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில்,  ஆகஸ்ட் 28 –ஆம் தேதி முதல் செப்டம்பர் 8–ஆம் தேதி வரை வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்படுவதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மார்க்கத்தில் வேளாங்கண்ணி சென்றடையும்.

வழக்கம் போல் சென்னையிலிருந்து காரைக்கால் – வேளாங்கண்ணி  எக்ஸ்பிரஸ் (இணைப்பு ரயில்) விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டிணம் மார்க்கத்தில் வேளாங்கண்ணி சென்றடையும்.

வேளாங்கண்ணியிலிருந்து கோவாவுக்கு வாரம் ஒருமுறை ரயில் இயக்கப்படுகிறது. திருச்சி, கரூர், பெங்களூர் வழியாக இந்த ரயில் கோவா சென்றடையும்.

வேளாங்கண்ணியிலிருந்து கேரளா மாநிலத்திற்கு தினமும் ரயில் இயக்கப்படுகிறது.