திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பதிவு செய்த நாள் : 16 ஆகஸ்ட் 2018 11:29

திருப்பதி,   

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்திருந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி மகா கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது. ஆகஸ்ட் 12ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. அன்றைய தினமே மூலவர் ஏழுமலையான் மற்றும் இதர சன்னதி தெய்வங்கள், உற்வச மூர்த்திகளின் ஜீவ சக்தி கலசங்களில் மாற்றி யாகசாலையில் நேற்று வரை வைத்து அர்ச்சகர்கள் யாகம் செய்தனர்.

ஆகஸ்ட் 13ஆம் தேதி 8 வகையான பொருட்களை இடித்து அர்ச்சகர்கள் அஷ்டபந்தனம் தயாரித்தனர். மேலும் மூலவர் சன்னதி, இதர சன்னதிகளின் கோபுரங்களுக்கு மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு தங்க கொடிமரம் புனரமைக்கப்பட்டது. பின்னர், ஆகஸ்ட் 14ஆம் தேதி அஷ்டபந்தன சமர்ப்பணம் நடந்தது. ஏழுமலையான் திருவடி மற்றும் பீடத்தின் இடைவெளியில் அஷ்டபந்தன நிரப்பப்பட்டது. நேற்று சம்பிரதாய முறையில் கோவில் சுத்தம் செய்யப்பட்டது. மூலவருக்கு மகா சாந்தி அபிஷேகமும், பூர்ணாஹூதியும் நடந்தது.

இதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை 3 மணி முதல் 3.30 மணிவரை யாக சாலை பூஜை நடந்தது. பிறகு ஆகம விதிகளின்படி காலை 10.15 மணியளவில் அஷ்டபந்தன பாலாலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தலைமை குருக்கள் வேணு கோபாலசாமி தலைமையில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின்னர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும் கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றியும் மாடவீதிகளிலும் குவிந்திருந்தனர்.

இன்று மாலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் பெரிய சே‌ஷ வாகனத்திலும், பின்னர் உற்சவர் மலையப்ப சாமி மட்டும் தனியாக கருட வாகனத்திலும் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று இரவு 12 மணி முதல் வழக்கம் போல் அனைத்து தரிசனங்களும் தொடங்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அடுத்த மகா கும்பாபிஷேகம் 2030ஆம் ஆண்டு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது