ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2018 11:43

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஆண்டாள் அவதார தினமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணிய தலமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் போற்றப்படுகிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோபுரம், பெரிய தேர், பெரியாழ்வார் பாடிய கோயில், பெரியகுளம், பெரிய பெருமாள் என்று பல பெருமைகளைக் கொண்டது. இத்தகைய பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள் தான் ஆடிப்பூரமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு பெற்றதாகும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 7.20 மணிக்கு தொடங்கியது. தேரோட்டத்தை எம்.எல்.ஏ சந்திர பிரபா, ஆட்சியர் சிவஞானம் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டியது.

ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மண்டல ஐ.ஜி தலைமையில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்