உச்சநீதிமன்ற பரிந்துரையை ஏற்று பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

பதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2018 15:08

சென்னை,

உச்ச நீதிமன்றப் பரிந்துரையை மதித்து பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் ஒருமுறை பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

7 தமிழர்கள் விடுதலை குறித்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரை வரவேற்கத்தக்கதாகும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழர்களையும் விடுதலை செய்யக்கூடாது என்று வாதிட்டார்.

ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்த தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் ஒருமுறை பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மிகவும் தவறாகத் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய முடியாது என்ற மத்திய அரசின் நிலைப்பாடு மிகவும் தவறானது என்றும், 7 தமிழர்களும் இனியும் சிறைகளில் வாடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருதுவதையே அதன் இந்தப் பரிந்துரை காட்டுகிறது. இதுதான் மிகவும் சரியான, நியாயமான நிலைப்பாடும் ஆகும்.

ராஜீவ் கொலைக்கும், 7 தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தான் உண்மையாகும். ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதை அவ்வழக்கை புலனாய்வு செய்த சிபிஐ, மேல்முறையீட்டு விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் ஆகியவை ஒப்புக்கொண்டுள்ளன. புலனாய்வின் போது, பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை தாம் திரித்து எழுதியதால் தான் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவதை இந்தியாவில் யாருமே எதிர்க்கவில்லை. அவர்கள் விடுதலை செய்யப்படுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று ராஜீவ் காந்தி குடும்பத்தினர் அண்மையில் கூறியுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பலரது குடும்பத்தினரும் இதே கருத்தைக் கூறியுள்ளனர்.

வழக்கை புலனாய்வு செய்த அதிகாரிகள், விசாரித்த நீதிபதிகள் என அனைத்துத் தரப்பினரும் 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், மத்திய அரசு மட்டும் விடுதலைக்கு எதிராகப் பிடிவாதம் பிடிப்பது முறையல்ல.

எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.