2022க்குள் பெட்ரோலுடன் 10 சதவீத எத்தனாலை கலக்க இலக்கு: பிரதமர் மோடி

பதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2018 14:49

புதுடில்லி,   

வரும் 2022ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 10 சதவீத அளவிற்கு எத்தனாலை கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச இயற்கை எரிபொருள் தினத்தை முன்னிட்டு ஒரு மாநாடு டில்லியில் இன்று நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயிரி எரிபொருள் வல்லுனர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி,”வாஜ்பாய் அரசின்போதே எத்தனால் கலவை திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், முந்தைய அரசு அந்த திட்டத்தை தீவிரமாக எடுத்து செயலாற்றவில்லை. இந்த திட்டத்தின்மூலம், அடுத்த 4 ஆண்டுகளில் 450 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்படும்.

தற்போது 141 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் இறக்குமதியில் ரூ.12,000 கோடி சேமிக்கலாம்” என்று கூறினார்.

மேலும்,”வரும் 2022ம் ஆண்டுக்குள் 10 சதவீதம் அளவிற்கும் 2030ம் ஆண்டிற்குள் 20 சதவீதம் அளவிற்கும் பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது பெட்ரோலில் 3.8 சதவீத எத்தனால் உள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

”பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலுக்காக அனைத்து வகையான வேளாண் கழிவுகளும் பயன்படுத்தப்படும். இதன்மூலம் வேளாண் பண்ணைகளில் கழிவுகள் அதிக அளவு சேர்வது தவிர்க்கப்படும். இந்த திட்டத்தால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்” என்று கூறினார்.

”நாட்டில் 12 உயிரி நிலையங்களை கொண்டுவர ரூ.10,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலையங்கள் பயிர் சுள்ளிக்கட்டை, அதன் கழிவுகள் மற்றும் நக்ர்ப்புற கழிவுகளில் இருந்தும் எரிபொருளை உற்பத்தி செய்யும்” என்று தெரிவித்தார்.