ஈராக்கில் மறுவாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா கட்சி வெற்றி: தேர்தல் ஆணையம்

பதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2018 13:35

பாக்தாத்

ஈராக்கில் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா கட்சி வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்நிலையில் திடீரென ஐஎஸ் பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியைக் கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப்படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து ஈராக்கில் கடந்த ஜூலை 12ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணியை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணியும், பதே கட்சி கூட்டணியும் மோதின. இந்த தேர்தலில் 44.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

பின்னர் நடந்த வாக்கு எண்ணிக்கையில் மதகுரு மக்தாதா தலைமையிலான சயிரூன் கூட்டணி 54 இடங்களில் வெற்றிபெற்றது. இவருக்கு அடுத்தபடியாக பதே கட்சி 47 இடங்களை கைப்பற்றியது. இந்த தேர்தலில் பிரதமர் அபாடி தலைமையிலான நசார் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கட்சி 42 இடங்கள் பிடித்து 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

தேர்தல் நடைமுறைகளில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளும் தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து முறைகேடுகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் விசாரணை நடத்தி, 1000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளின் வாக்கு எண்ணிக்கையை செல்லாது என அறிவித்தது.

இவ்வாறு பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், வாக்குகளை எந்திரங்கள் மூலம் எண்ணாமல், நேரடியாக கைகளால் எண்ணும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, வாக்குகள் அனைத்தையும் கைகளால் எண்ண வேண்டும் என பாராளுமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஈராக் அதிபர் தேர்தலில் நடத்தப்பட்ட மறுவாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் சதார் தலைமையில் ஆட்சி அமைப்பார் என்றும் தெரிவித்துள்ளது.