அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் திடீர் சந்திப்பு: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை

பதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2018 13:10

சென்னை,

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து, திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனை, கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது நல்லடக்கம் 8ம் தேதி மாலை மெரினா கடற்கரையில்  நடைபெற்றது.
இந்த நிலையில், திமுகவின் பொதுச்செயலாளர் க. அன்பழகனை, மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
சென்னை - கீழ்ப்பாக்கத்தில் உள்ள க. அன்பழகன் இல்லத்துக்கு வந்த ஸ்டாலின், துரைமுருகன், ஆ. ராசா உள்ளிட்டோர், திமுகவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

கருணாநிதி மறைவைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ள இரங்கல் கூட்டம் குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திமுக அவசர செயற்குழு கூட்டம்

திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி, செவ்வாய் கிழமை அன்று அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு கூடுகிறது. 

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பொதுச்செயலாளர் க. அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்.