அண்ணா பல்கலை. முறைகேடுகளுக்கு பதிவாளர் தான் காரணம்: ஆசிரியர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2018 12:26

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் அனைத்திற்கும் பதிவாளர் கணேசன்தான் காரணம் என அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்ற தேர்வுகளில் தோல்வியடைந்த 3.02 லட்சம் மாணவ, மாணவியர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 73,733 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
16,636 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் நடந்த முறைகேடுகள் குறித்து மீனா என்ற மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிந்துள்ளனர்.


 மேலும் இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் பேராசிரியர்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் அனைத்திற்கும் பதிவாளர் கணேசன்தான் காரணம் என பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, பதிவாளர் கணேசனை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி ஆளுநருக்கும், பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் ஆசிரியர் கூட்டமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர்.