திருமுருகன் காந்தி கைது: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

பதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2018 12:08

சென்னை

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களை கூறுவோரையும், போராடுபவர்களையும் தேச துரோக வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளின் கீழ் தமிழக அரசு தொடர்ந்து கைது செய்து வருகிறது.

இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான, பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துச் சொல்லும் உரிமைகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருவதும், அடக்கு முறைகளை ஏவுவதும் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக நேற்று அதிகாலை, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உடனடியாக திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெனிவாவிலிருந்து இந்தியா திரும்பியபொழுது, நேற்று பெங்களூர் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். தற்பொழுது சென்னைக்கு அழைத்துவரப்பட்டு, காவலர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.