ரஃபேல் ஒப்பந்த விவகாரம்: பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

பதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2018 11:29

புதுடில்லி

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என்று பாராளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.

பிரான்ஸிடம் இருந்து ரூ. 58,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இது குறித்த தகவல்களை வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஆனால், இது ரகசியம் காக்கப்படவேண்டிய ஒப்பந்தம் என்பதால் இதுபற்றி தெரிவிக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது எழுப்பிய ராகுல்காந்தி, டில்லியில் நான் பிரான்ஸ் அதிபர் மேக்ரனை சந்தித்தபோது, அவர் ரஃபேல் ஒப்பந்தம் ரகசியமானது அல்ல என்று தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். எனவே, நிர்மலா சீதாராமன் பொய்களை கூறிவருவதாக குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி கூறுவது முற்றிலும் தவறானது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்த பிரச்சினை வலுபெற்றுவரும் நிலையில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என்றும் விவசாய கடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரியும் பாராளுமன்ற வளாகத்தில் இன்று சோனியாகாந்தி தலைமையில் எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இந்த விஷயத்தில் கூட்டு பாராளுமன்ற குழு விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யவிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சோனியா,”எங்கள் கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது, இதை மேலும் நான் கூறமாட்டேன்” என சோனியா காந்தி கூறினார்.

இந்த போராட்டத்தில் ராஜ் பாபர், குலாம் நபி ஆசாத், அனந்த் சர்மா, அம்பிகா சோனி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி டி.ராஜா, ஆம் ஆத்மி எம்பி சுஷில் குப்தா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.