தலித்துகளுக்கு எதிரான மனநிலை கொண்டவர் பிரதமர் மோடி: ராகுல் காந்தி சாடல்

பதிவு செய்த நாள் : 09 ஆகஸ்ட் 2018 20:04

புதுடில்லி

தலித் மக்களுக்கு எதிரான மனநிலை உடையவர் பிரதமர் மோடி. இதனை எதிர்த்து அனைவருக்குமான இந்தியா உருவாக காங்கிரஸ் கட்சி போராடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

அதனால்தான், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப்போகச் செய்த நீதிபதிக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளார் எனவும் ராகுல், மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.

எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் நீதிமன்றம் திருத்தம் செய்யப்பட்டதற்கு டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்பு சார்பில் இன்று போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:

பிரதமர் மோடி, தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் எதிரான மனநிலையைக் கொண்டவர். பாஜகவுக்கும், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும், ஆட்சியாளர்களின் மனதிலும் தலித்துகளுக்கு எவ்விதமான இடமும் இல்லை.

பிரதமர் மோடியின் மனதில் தலித்களுக்கு இடம் இருந்திருந்தால், தலித்களுக்கான கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, ஒரு புத்தகத்தில் தலித்துகள் குறித்து என்ன எழுதினார் தெரியுமா? தலித்துகள் சுத்தம் செய்யும் பணியைச் செய்யும் போதுதான் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று எழுதினார். இதுதான் மோடி. இதுதான் மோடியின் சிந்தாந்தமும் சிந்தனையுமாகும்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்றவை என்னுடைய தந்தை ராஜீவ்காந்தி பிரதமாக இருக்கும்போது கொண்டுவரப்பட்டது.

ஆனால், அந்தச் சட்டங்களை எல்லாம் இப்போது நீர்த்துப்போகச் செய்ய பிரதமர் மோடி அனுமதிக்கிறார். எஸ்சி, எஸ்டி சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக உத்தரவுகளைப் பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கோயல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு, பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டில் தலித்துகளின் நலன்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எந்தெந்த மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம், தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள், நசுக்கப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட இந்தியா எங்களுக்கு வேண்டாம். தலித்துகள், ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் உள்ளிட்ட ஒவ்வொருவரும் வளர்ச்சி காணும் இந்தியாவே எங்களுக்கு வேண்டும். அப்படியொரு இந்தியா உருவாக போராடுவோம்.

தலித்துகளுக்கு எதிரான சிந்தனையுடன் இருக்கும் மோடிக்கும், பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எதிராக நாடே எழுந்து நிற்க வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

அமித் ஷா பதில்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக தலைவர் அமித் ஷா அவரது டுவிட்டரில் பின்வருமாறு பதிலளித்துள்ளார்:

ராகுல் ஜி நாடாளுமன்றத்தில் கண் அடிப்பது, இடையூறு விளைவிப்பது ஆகியவற்றை விட்டுவிட்டு, சில நேரங்களில் உண்மைகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி, இந்த சட்டத்தில் வலுவான திருத்தங்கள் கொண்டுவர உறுதி அளித்துள்ளது. அதை எதிர்த்து ஏன் போராடுகிறீர்கள்?

பீம ராவ் அம்பேத்கர், பாபு ஜெகஜீவன் ராம் மற்றும் சீதாராம் கேசரி ஆகியோருக்கு உங்களது கட்சி எப்படி மரியாதை அளித்தது என்பது குறித்து  நீங்கள் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பல வருடங்களாக காங்கிரஸ் தலித் மக்களை அவமானப்படுத்தியது. அவர்களுடைய விருப்பங்களை அவமதித்தது.

உங்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. மண்டல் கமிஷன் பரிந்துரையின் போது உங்களது தந்தை ராஜீவ்காந்தி நாடாளுமன்றத்தில் பேசியது குறித்து படித்து பாருங்கள். அப்போதுதான் பின்தங்கிய மக்கள் மீது காங்கிரஸ் எவ்வளவு வெறுப்பு கொண்டிருந்தது என்பது தெளிவாகப் புரியும்.

ஆனால் இன்று நீங்கள் தலித் நலன்கள் பற்றி பேசுகிறீர்கள்? காங்கிரஸ் கட்சி, தலித் தலைவர்களையும் பெருமைகளையும் அவமதிக்கும் நிலையில், மோடி அரசு அம்பேத்கருக்கு தொடர்புடைய ஐந்து இடங்களை மேம்படுத்தி வருகிறது

இவ்வாறு, அமித் ஷா அவரது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.