முத்தலாக் மசோதாவில் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பதிவு செய்த நாள் : 09 ஆகஸ்ட் 2018 16:28

புதுடில்லி

முத்தலாக் சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைதானாலும் நீதிமன்றம் ஜாமீன் தரும் வகையில் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள உடனடி ‘முத்தலாக்’ முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது பாராளுமன்ற மக்களவையில் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டு, அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் அது நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, மாநிலங்களவைக்கு அனுப்பப்ட்ட இந்த மசோதவில் திருத்தம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளில் ஈடுபட்டதால் கடந்த கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், முத்தலாக் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்னர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் ஜாமீனில் வெளிவரமுடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் ஜாமீன் வழங்க மாஜிஸ்திரேடிற்கு அதிகாரம் உள்ளது என சட்டத்திருத்தம் செய்ய முத்தலாக் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைதானாலும் நீதிமன்றம் ஜாமீன் தரும் வகையில் முத்தலாக் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் குற்றவாளிகள் ஜாமீன் கோரி மாஜிஸ்திரேடிடம் முறையிடலாம். ஜாமீன் வழங்க மாஜிஸ்திரேட்டிற்கு அதிகாரம் உண்டு. பாதிக்கப்பட்ட மனைவி தானும் தன் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் பிழைக்கவேண்டி கொடுப்பனவு வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டிடம் கோரலாம்.

கருணாநிதிக்கு 2 நிமிடம் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு இரங்கல் 2 நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.