எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

பதிவு செய்த நாள் : 09 ஆகஸ்ட் 2018 15:54

புதுடில்லி,

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்ட திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது.

கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி உச்சநீதிமன்றம் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் விதிகளை நீர்த்து போக செய்யும் படி தீர்ப்பு ஒன்றை அளித்தது.

அதன்படி எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தொடர்பாக வரும் புகார் குறித்து விசாரணைக்கு பின்பே வழக்கு பதிவு செய்யப்படும். வழக்கு பதிவு செய்ததும் குற்றம்சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்யாமல் அரசு ஊழியராக இருக்கும் பட்சத்தில் இலாகா பூர்வமான அனுமதி பெற்ற பின்பே கைது செய்ய முடியும்.

இந்த தீர்ப்பிற்கு நாடு முழுவதும் தலித் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜகவை சேர்ந்த தலித் எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களே கடுமையாக குறை கூறினார்கள்.

இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் தலித்துகள் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தினர். அதில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை திருத்தும் மசோதாவை பாஜக தாக்கல் செய்யவில்லை என்றால் அகில இந்திய அளவில் எஸ்சி/எஸ்டி அமைப்புகளின் சார்பில் டில்லியில் எதிர்ப்பு பேரணி நடத்தப்படும் என மத்திய அமைச்சரவையில் உள்ள ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளரிடம் அறிவித்தார்.

அதை தவிர்க்க கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி மக்களவையில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்ட திருத்த மசோதாவை அரசு தாக்கல் செய்தது. ஆகஸ்ட் 6ம் தேதி மக்களவையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையிலும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் விதிகளை நீர்த்து போக செய்யும் படி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு மீண்டும் முன்பு போல் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் பின்பற்றப்படும். 

இந்த மசோதா குறித்த விவாதத்தின் போது எதிர்கட்சியை சேர்ந்த சிலர் இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் அளித்த அழுத்தம், தலித் அமைப்புகள் இந்த மாதம் அறிவித்துள்ள நாடு தழுவிய போராட்டம் ஆகியவை காரணமாகவே மத்திய அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்ததாக தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்து பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லாட்

‘‘பாஜக தலைமையிலான மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பாடுபடும் என  பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்’’

‘‘அதன்படி பிரதமர் மோடியின் பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மாறாக எதிர்கட்சிகளின் அழுத்ததால் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை’’ என தெரிவித்தார்.  

எதிர்கட்சிகளுக்கு பதிலடி

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதற்கு லோக் ஜன்சக்தி கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் மோடி அரசு தலித்துகளுக்கு எதிராக செயல்படுவதாக  குறை கூறி வரும் எதிர்கட்சிகளுக்கு தக்க பதிலடி அளிக்கப்பட்டுள்ளது என  ராம் விலாஸ் பஸ்வான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.