உயர்த்தப்பட்ட மருந்துகளின் விலையை திரும்ப பெறுவதாக அமெரிக்க பிஃபிஷர் நிறுவனம் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2018 21:01

வாஷிங்டன்

அண்மையில் உயர்த்தப்பட்ட மருந்துகளின் விலையை திரும்ப பெறுவதாக அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனம் பிஃபிஷர் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் விரிவாக கலந்துரையாடிய பின்னர், மருந்துகளின் விலையை திரும்ப பெறுவதாகவும், மீண்டும் ஜூலை 1-ம் தேதிக்கு முந்தைய விலையில் மருந்துகளை விரைவில் விற்க இருப்பதாகவும் பிஃபிஷர் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இயான் ரீட் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபரின் சுகாதாரம் குறித்த திட்டங்களை வலுப்படுத்தவும் நோயாளிகளுக்கு கூடுதல் மருத்துவம் வழங்கவும், கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் மருந்துகளின் விலையை உயர்த்துவதாக இயான் நேற்று அறிவித்தார்.

இதையடுத்து அதிபர் டிரம்ப் பிஃபிஷர் மற்றும் இதர அமெரிக்க மருந்து நிறுவனங்களை குறிவைத்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டார். அந்த பதிவில், எந்த காரணமுமின்றி விலையை உயர்த்திய மருந்து நிறுவனங்கள் வெட்கப்பட வேண்டும். தங்களை பாதுகாத்து கொள்ள ஏழைகள் மற்றும் மற்றவர்களையும் சாதகமாக பயன்படுத்துகின்றனர் என்று கூறியிருந்தார்.

தற்போது நேட்டோ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ப்ரசல்ஸ் சென்றுள்ள அதிபர் டிரம்ப், பிஃபிஷர் நிறுவனத்தின் மருந்து விலை குறைப்பு அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

பிஃபிஷர் நிறுவனத்தின் முடிவை வரவேற்கிறேன். பிற நிறுவனங்களும் இவ்வாறு விலையை குறைப்பார்கள் என்று நம்புகிறேன். அமெரிக்க மக்களுக்கு இது ஒரு நற்செய்தி என்று டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிஃபிஷர் நிறுவனம் மருந்துகளின் விலையை திரும்ப பெறுவதால் அமெரிக்க நோயாளிகள் அதிக பணம் செலுத்த தேவையில்லை என்றும் அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் டிரம்ப் மாநாட்டிற்காக ப்ரசல்ஸ் சென்றுள்ள நிலையில் பிஃபிஷர் அதிகாரி இயானுடன் தொலைபேசியில் விரிவாக பேசிய பின்னர், சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் செயலர் அலெக்ஸ் அஜாருடனும் டிரம்ப் பேசினார்.

பிஃபிஷர் நிறுவனம் ஏறக்குறைய 40 மருந்துகளின் விலையை ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தியது. அமெரிக்காவில் உள்ள பிஃபிஷர் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்த 5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருப்பதாக பிஃபிஷர் நிறுவனம் அறிவித்திருந்தது.