ஜெர்மனி தன் கொள்கைகள் குறித்து சுயமாகவே முடிவெடுக்கும் : அதிபர் டிரம்பின் குற்றச்சாட்டுக்கு அதிபர் ஏஞ்சலா மெர்கல் பதில்

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2018 20:55

பிரச்சல்ஸ்,

ஜெர்மன் அரசு எப்போதும் சுயமாக சிந்தித்து தன் கொள்கைகள் சார்ந்த முடிவுகளை எடுக்கும் என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் இன்று அறிவித்தார். ரஷ்யாவின் கைப்பாவையாக ஜெர்மனி செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியதற்கு பதிலடியாக அதிபர் ஏஞ்சலா மெர்கல் இதை தெரிவித்தார்.

பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் கலந்துகொள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலர் இன்று பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வந்து சேர்ந்தனர்.

வரும் வழியில் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட அதிபர் டிரம்ப் ‘‘நேட்டோ கூட்டணியில் உள்ள பல நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை. அமெரிக்காவிற்கு அவர்கள் வழங்கவேண்டிய பணத்தை திருப்பித் தருவார்களா ?’’ என கேள்வி எழுப்பினார்.

பின் ஜெர்மனியை தாக்கி பேசிய அதிபர் டிரம்ப் ரஷ்யாவின் எரிவாயுவை நம்பி ஜெர்மனி இருப்பதால் அந்நாட்டின் கைப்பாவையாக ஜெர்மனி செயல்படுகிறது என குற்றம்சாட்டினார்.

பிரஸ்ஸல்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஏஞ்சலா மெர்கல் ‘‘முன்பு ஜெர்மனியின் ஒரு பகுதி சோவியத் யூனியனால் ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த நிலை மாறி ஜெர்மனி சுதந்திரமான குடியரசு நாடாக உருவானதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’

‘‘இன்று ஜெர்மனி அரசு தன் முடிவுகளையும் கொள்கைகளையும் சுயமாக எடுக்கும் சுதந்திரத்தை பெற்றுள்ளது. ஜெர்மனி இதுவரை நேட்டோவிற்கு அதிகமாக வழங்கியுள்ளது. ஜெர்மனி ஒன்றிணைந்த சுதந்திர நாடாக மாறியதில் நேட்டோ முக்கிய பங்காற்றியுள்ளது. அதேசமயம் நேட்டோ கூட்டணிக்கு ஜெர்மனியும் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளது’’

‘‘நேட்டோ கூட்டுப்படைகளுக்கு வீரர்களை அனுப்பும் நாடுகளில் ஜெர்மனி இரண்டாம் இடத்தில் உள்ளது. எங்களது பெரும்பாலான ராணுவ திறன்களை நேட்டோ படைகளுக்காக நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்’’ என அதிபர் டிரம்பின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார் அதிபர் ஏஞ்சலா மெர்கல்

ஜெர்மன் அரசு அடுத்த பத்தாண்டுகளில் தனது ராணுவத்திற்கான நிதியை 80 சதவீதம் அதிகரிப்பதாக அறிவித்தது.  ஆனால் இது போதுமான தொகை அல்ல என இன்று காலை அதிபர் டிரம்ப் தெரிவித்தார். நேட்டோ நாடுகள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு காத்திருக்காமல் உடனடியாக தங்கள் ராணுவ நிதியை அதிகரிக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தினார்.