காவிரியில் வெள்ளம் : தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2018 20:50

புதுடில்லி

    காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து கொட்டுவதால் கர்நாடகஅணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் காவிரிப் பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ளது. அதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழக அரசுக்கு மத்திய நீராதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.


கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய காவிரி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

 கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீ திறந்து விடப்படுகிறது. தண்ணீர் வரத்து வெகு வேகமாக அதிகரிப்பதால் கரநாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு கடந்த இரண்டு தினங்களாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று ஒரே நாளில் 3வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கபினி அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி. அணையில்  நீர்மட்டம்  110 அடியைத் தொட்டு உள்ளது . இதனால் காலையில் 38,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் பிற்பகலில் 45,000 கனஅடியாகவும், மாலையில் 50,000 கனஅடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கோவையை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் பில்லூர் அணை உள்ளது. இந்த அணையின் கொள்ளவு 100 அடி. இந்த அணையிலிருந்தும் விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேரே பவானி ஆற்றில் கலக்கிறது. அதனால் பவானி ஆற்றின் தாழ்வான கரைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. திங்களன்று விநாடிக்கு 40,000 கன அடியாக உயர்ந்தது. திங்களன்று கபினியில் திறந்த தண்ணீர் செவ்வாய் பிற்பகலில் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. அதனால் இன்று அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 50,000 கன அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென்று உயரந்து வருகிறது. செவ்வாயன்று 55 அடியாக இருந்த நீரின் மட்டம் புதனன்று மாலை 72 அடியாக உயர்ந்தது.

வெள்ள அபாயம்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் தலைக்காவிரி, பாகமண்டலா, விராஜ்பேட்டை, மடிகேரி, கோணிகொப்பா, சித்தாப்புரா, சுண்டிகொப்பா, சோமவார்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழை தொடர வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் முழுக்கொள்ளளவு 124 அடி ஆகும். மேலும் குறைந்த படசம் 90 அடி மேட்டூரில் இருக்கும் பொழுது திறந்தால்தான் குறுவை பயிருக்கு பயன்படும். அதனால் குறைந்த பட்சம் அடுத்த இரண்டு நாள்களில் மேட்டூர் அணையைத் திறக்க வாய்ப்பில்லை. .ஆனால் கர்நாடகத்தில் கொட்டும் மழையால் தர்மபுரி, சேலம்  ஈரோடு ஆகிய மாவட்டப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும்.

காவிரியில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் காவிரி பாயும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை மத்திய நீர்வளத்துறை எச்சரித்துள்ளது.