பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கிய 3 கேரள பாதிரியார்களின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2018 20:14

கொச்சி,

   இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட கேரளாவை சேர்ந்த மூன்று பாதிரியார்களின் முன் ஜாமீன் மனுவை கேரளா உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

பாவமன்னிப்பு கேட்க வந்த தன் மனைவியை கேரளா மலன்காரா சிரியன் தேவாலயத்தை சேர்ந்த 5 பாதிரியார்கள் பிளாக்மெயில் மூலம் பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதை தொடர்ந்து கேரள காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட 5 பாதிரியார்கள் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யதனர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார்களில் ஆப்ரகாம் வர்கீஸ், ஜாப் மாத்யூ மற்றும் ஜெய்சி.கே. ஜார்ஸ் ஆகிய மூவரும் கேரளா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அரசியல் காரணங்களுக்காக தங்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக குற்றம்சாட்டினர்.

பாதிரியார்களின் மனுக்களை விசாரித்த கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா விஜயராகவன் பாதிரியார்களின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பாதிரியார்களுக்கு தற்போது முன் ஜாமீன் வழங்கினால் அது வழக்கு விசாரணையை கடுமையாக பாதிக்கும் என நீதிபதி விளக்கம் அளித்தார்.