வராக்கடன் குறித்து தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம்

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2018 20:09

புதுடில்லி

    தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் நாட்டில் அதிகரித்து வரும் வராக்கடன்   குறித்து நாடாளுமன்ற குழுவிற்கு இன்று விளக்கம் அளித்தார்.

அமலாக்கத் துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு ஆகியவற்றுக்கும் நாடாளுமன்ற குழுவில் விளக்கம் அளிக்க கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் எப்போது விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்கள், ஹஸ்முக் ஆதியா உள்ளிட்ட மத்திய நிதி அமைச்ச அதிகாரிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர்.
அப்போது வங்கி துறைகளில் அதிகரித்து வரும் வராக்கடன் மற்றும் பிரச்சினைகள் குறித்து

நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பியதாக தெரிகிறது.

பொதுத்துறை வங்கிகளில் நிர்வாக குழு கூட்டத்தின் போதே பெருந்தொகை கடனுக்கு அனுமதி அளிக்கப்படும். எனவே நான்கு மணி நேரம் நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது, பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக குழு கூட்ட அறிக்கை, பெருந்தொகை கடனுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட ஆவணங்களை உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

அமலாக்கத் துறை இயக்குனர் கர்னல் சிங் மற்றும் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா ஆகியோரும் வராக்கடன் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற குழுவில் விளக்கம் அளிக்க உள்ளனர்.

வங்கித்துறையின் வராக்கடன் ரூ.8.99 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கிய முன்தொகையில் 10.11 சதவீதமாகும். இதில் பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் மட்டும் ரூ.7.77 லட்சம் கோடியாகும்.