விவசாயிகளை காங்கிரஸ் வெறும் வாக்கு வங்கிகளாகதான் நடத்துகிறது : பிரதமர் மோடி கடும் சாடல்

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2018 19:58

மாலவுட்,

   விவசாயிகளை காங்கிரஸ் கட்சியினர் வெறும் வாக்கு வங்கிகளாகதான் நடத்துகிறார்கள். ஒரு குடும்பத்தின் நலனுக்காக நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு காங்கிரஸ் துரோகம் செய்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி இன்று கடுமையாக சாடினார்.பஞ்சாப் மாநிலத்தின் மாலவுட் நகரில் சிரோமணி அகாலி தளமும் பாரதீய ஜனதாவும் இணைந்து நடத்திய விவசாயிகளின் பேரணி இன்று நடைபெற்றது. மத்திய அரசு விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியதை பாராட்டி இந்த பேரணி நடைபெற்றது.

பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். இந்த பேரணியில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், முன்னாள் பஞ்சாப் முதல்வர் பர்காஷ் சிங் பாதல், எஸ்.ஏ.டி கட்சி தலைவர் சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த பல விவசாயிகள் இந்த பேரணியில் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.  அதன் விவரம் :

கடந்த 4 ஆண்டுகளாக நீங்கள் அனைவரும் நிர்ணயித்த இலக்கை விட அதிகமாக விளைச்சலை கொடுத்து வருகிறீர்கள். எந்த பயிராக இருந்தாலும் முந்தைய ஆண்டை விட அதிக விளைச்சலை வழங்குகிறீர்கள். இந்த சாதனையை படைத்துவரும் உங்கள் அனைவரையும் நான் தலைவணங்குகிறேன். இதே நிலை வருங்காலத்திலும் தொடர்ந்து நீடிக்கும்.

எனது விவசாய சகோதர, சகோதரிகளே நீங்கள் இந்த நாட்டிற்கே அன்னமிடும் சேவகர்கள். நீங்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் அயராமல் பாடுபட்டு உழைக்கிறீர்கள்.

கடுமையாக உழைத்தும் கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் உங்கள் நிலை மிகவும் மோசமாக, விரக்தி கொண்டதாக உள்ளது.காங்கிரஸ் கட்சி உங்களிடம் பல பொய் வாக்குறுதிகளை கூறி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. விவசாயிகளான உங்களை காங்கிரஸ் கட்சியினர் வெறும் வாக்கு வங்கிகளாகவே கருதுகிறார்கள். இவ்வளவும் ஒரே ஒரு குடும்பத்தின் வளர்ச்சிகாவே செய்யப்படுகிறது.

தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது என மோடி கூறினார்.

தன் உரையை பஞ்சாபி மொழியில் ஆரம்பித்த மோடி நாட்டின் எல்லை பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பு இரண்டிலும் பஞ்சாப் மக்கள் தேசத்திற்கு முன்னுதாரணமாக விளங்குவதாக பாராட்டினார்.

வைகோல் எரிப்பதை தடுக்க நடவடிக்கை

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் அறுவடை முடிந்த பின் மீதமுள்ள வைக்கோலை எரிப்பதால் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரிக்கிறது. இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வை கண்டுபிடிக்க மத்திய அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

‘‘இந்த பிரச்சனையை சமாளிக்க பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் பாதிக்கும் மேல் பஞ்சாப் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது’’

‘‘எஞ்சியுள்ள வைக்கோலை அகற்ற பயன்படும் இயந்திரங்களை வாங்க தேவையான 50 சதவீத தொகையை விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பலன் பெற வேண்டும். அதன் மூலம் நிலத்தின் வளத்தை பாதுகாத்து காற்று மாசு அதிகரிப்பதை தடுக்கலாம்’’

‘‘மக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு விவசாயிகள் வைக்கோல் எரிப்பதை தவிர்க்க வேண்டும். ஆய்வறிக்கைகளின் கணிப்புப்படி அவற்றை நிலத்தில் அப்படியே விட்டுவிட்டால் உரம் வாங்குவதற்கான செலவில் ஹெக்டருக்கு 2000 ரூபாய் வரை மிச்சமாகும்’’ என மோடி கூறினார்.