இலங்கையில் காவலரைக் கத்தியால் குத்திக் கொன்ற புத்த துறவி கைது

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2018 19:46

கொழும்பு

   இலங்கையில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தன்னைக் கைது செய்ய வந்த காவலரை கத்தியால் குத்தி கொலை செய்த புத்த துறவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையின் தென்கிழக்கில் ரத்னபுர பகுதியில் உள்ள கலந்தா புத்த கோயிலைச் சேர்ந்த துறவி கொன்வாலனே தம்மசரா தீர மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை கைது செய்ய சம்மன் அனுப்பிய நிலையில் புத்த துறவி தலைமறைவானார்.
இந்நிலையில் அவரைக் கைது செய்ய ஆயுதம் எதுவும் இல்லாமல் சென்ற காவலரைக் கழுத்தை நெறித்தும் கத்தியால் குத்தியும் புத்த துறவி கொலை செய்துள்ளார்.

கோயிலில் இருந்து காவலரின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புத்த துறவி ஒருவர் காவலரைக் கத்தியால் குத்திக் கொலை செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னர், கடந்த 1959 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க படுகொலையில் தொடர்புடைய புத்த துறவி 1962ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.