தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிகெட் போட்டியில் வெளிமாநிலத்தவர் அணியில் இடம்பெற உச்சநீதிமன்றம் தடை

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2018 19:23

புதுடில்லி,

   தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிகெட் போட்டிகள் இன்று மாலை மணி 7.15க்கு துவங்குகின்றன. 8 அணிகள் போட்டியில் கலந்து கொள்கின்றன. ஆகஸ்டு 12ந்தேதிவரை போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த அணிகள் ஒவ்வொன்றும் எந்த மாவட்டத்தின் பிரதிநிதியாக கலந்து கொள்கின்றனவோ அந்த மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே அணியில் இடம்பெற முடியும். வேற்று மாநிலத்தவரை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று கண்டிப்பாக கூறிவிட்டது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிகெட் போட்டிகளை நடத்தும் சங்கம் என்ற வகையில் தமிழ்நாட்டு கிரிகெட் அசோசியேஷன் ஒவ்வொரு அணியும் வெளி மாநிலத்தை சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்களை சேர்த்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்திருந்தது.

இதை இந்திய கிரிகெட் கண்ட்ரோல் போர்ட் ஏற்றுக்கொள்ளவில்லை. 2009ம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அப்போது இருந்து வெளிமாநிலத்தவர் யாரையும் அனுமதிக்கும் வழக்கம் இல்லை என்று கிரிகெட் கண்ட்ரோல் போர்டு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பராக் திரிபாதி வாதிட்டார்.

வெளிமாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் மாநில கிரிகெட் சங்கத்திடம் இருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சான்றிதழ் தாக்கல் செய்தால் அனுமதிக்கலாம் என்று தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளுக்காக ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித் குமார் கூறினார். ஆனால் ரஞ்சித் குமார் கூறியதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.