நீட் கருணை மதிப்பெண் விவகாரம்: ரங்கராஜன் எம்.பி. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2018 14:40

புதுடில்லி,

   தமிழ் வழியில் 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் எம்.பி ரங்கராஜன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை (நீட்) சிபிஎஸ்இ மே 6-ம் தேதி நாடு முழுவதும் நடத்தியது. தேசிய அளவில் நடைபெறும் தேர்வு என்பதால் இந்தி, குஜராத்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்பட்டது.
இதற்கு தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் விண்ணப் பித்தனர். இதில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமிழ் வழியில் தேர்வு எழுதினர்.

 3 மணி நேரம் நடைபெற்ற இத்தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவுகளில் இருந்து மொத்தம் 180 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்த வினாத்தாளில் பல்வேறு கேள்விகள் தவறாக இருந்தன. மேலும், தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு விதியும் இருந்ததால், தமிழ் வழியில் தேர்வெழுதிய ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் கல்வியாளர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மொழிபெயர்ப்பு காரணமாக தவறாகக் கேட்கப்பட்டிருந்த 49 கேள்வி களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மே 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத் தாளில் இயற்பியல் பாடத்தில் 10 வினாக்கள், வேதியியலில் 6 வினாக்கள், உயிரியலில் 33 வினாக்கள் உள்பட 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க் கப்பட்டிருந்தன. இதனால் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும். அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதோடு, வழக்கு விசாரணையின்போதே தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. நீட் தேர்வு முடிவுகள் தொடர்பான அணுகுமுறை ஆகியவற்றுக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததோடு சிபிஎஸ்இ-யை கடிந்து கொண்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதன் விபரம் பின்வருமாறு:

நீட் தேர்வு வழக்கு விசாரணையின்போது சிபிஎஸ்இ தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்புடையதாக இல்லை. நீட் தேர்வு விடை சுருக்கத்தை வெளியிடுமாறு நீதிமன்றம் கேட்டபோது, அதற்கும் சிபிஎஸ்இ மறுத்து விட்டது.

தேசிய அளவில் நடத்தப்படும் இத்தகைய தேர்வுகளில், வினாத்தாளில் உள்ள தவறுகளை எளிதாகக் கருதிவிட முடியாது. இப்பிரச்னையை மேம்போக்காக அணுகாமல் மாணவர்களின் நிலையில் இருந்து எண்ணிப் பார்க்க வேண்டும். அதேநேரம், நீட் தேர்வு வினாவில் உள்ள தவறைப் புரிந்து பதில் எழுதிய மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.  இந்த வழக்கில் மொழி மாற்றத்தில் தவறு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மொழி மாற்றத்தில் தவறு நிகழ்ந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும். இந்த மதிப்பெண் அடிப்படையில் இரு வாரங்களுக்குள் புதிய தரவரிசைப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும். அதுவரை தற்போதைய தரவரிசைப் பட்டியலையும், கலந்தாய்வையும் நிறுத்தி வைக்க வேண்டும். புதிய தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு மூலமாக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

உச்சநீதி மன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு குறித்து இதுவரை சிபிஎஸ் ஈ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் எம்.பி ரங்கராஜன் எம்.பி. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சிபிஎஸ்இ எந்த நேரமும் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தங்களது தரப்பினைக் கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது என்று அந்த மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.