சீனா மீது அடுத்தக்கட்ட இறக்குமதி வரி உயர்வு: அமெரிக்கா அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2018 13:31

வாஷிங்டன்,

   வர்த்தக போரின் அடுத்தக்கட்டமாக சீனாவின் 20,000 கோடி டாலர் மதிப்பிலான இறக்குமதி பொருட்கள் மீது கூடுதலாக 10 சதவீத வரி விதிப்பதற்கான நடவடிக்கையை அமெரிக்கா துவங்கியுள்ளது. இதன் மூலம் இரு நாடுகள் இடையேயான வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.

சீனா நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா பல கோடி மதிப்பிலான சீன இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தது. அதற்கு சீனாவும் பதிலடி கொடுக்க தயார் என தெரிவித்தது.
அதை தொடர்ந்து கடந்த ஜூலை 6ம் தேதி சீனாவின் சுமார் 3,400 கோடி டாலர் இறக்குமதி பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்து அமல்படுத்தியது. இந்த வரி தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின் சீனாவின் 5000 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் வரை இந்த வரி நீட்டிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக  அதே நாளில் அந்நாட்டின் 3,400 கோடி டாலர் இறக்குமதி பொருட்கள் மீது சீனா புதிய வரிகளை அமல்படுத்தியது. மேலும் 1600 கோடி டாலர் மதிப்பிலான இறக்குமதி பொருட்கள் மீது புதிய வரிகள் விதிக்கப்படும் என சீனா எச்சரித்தது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. சீனா தன் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை மாற்றிக்கொள்ளாமல் பதில் நடவடிக்கை எடுப்பது நியாயமல்ல என அமெரிக்கா குற்றம்சாட்டியது.

அதை தொடர்ந்து சீனாவின் 20,000 கோடி டாலர் பொருட்கள் மீது 10 சதவீத வரி விதிக்கும்படி அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் துவங்கியுள்ளன’’ என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லித்திசைசர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.