சென்னையில் மாணவருக்கான வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு: ஆளுநர் தொடங்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2018 12:16

சென்னை,

மாணவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டை அதிகரிக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.

 ஆளுநரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால் வரவேற்றார். கருத்தரங்கை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இருந்து ஆண்டுக்கு 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். எனவே மாணவ-மாணவிகள் திறன் மேம்பட கற்றுக்கொடுப்பது அவசியம். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க, தொழில் நிறுவனங்களுக்கு தேவையான திறமைகளை  ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும்.

துணைவேந்தர்களை தேர்ந்து எடுப்பதில் வெளிப்படைத்தன்மை, நேர்மை ஆகியவற்றை கடைபிடிக்கிறோம். விண்ணப்பிப்பவர்களில் திறமையானவர்களை தேர்ந்து எடுக்கிறோம்.


பல்கலைக்கழகத்தின் உயரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் நல்ல நடத்தைகளையும், போதனைகளையும் இளைய தலைமுறையினரிடம் விதைக்க வேண்டும். சமூகத்தின் வளர்ச்சி மற்றும் வாழ்க்கையின் இலக்கை அடைய மாணவ சமுதாயத்துக்கு பேராசிரியர்கள் முதல் துணைவேந்தர்கள் வரை ஒளியாக இருந்து வெளிச்சம் காட்ட வேண்டும். என்ன கற்கிறோமோ அதுவே நமக்கு பின்னாளில் உதவும்.

இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால்  பேசினார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தரமான திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் உயர் கல்வியை வழங்குவதே இந்த அரசின் நோக்கம். உலக அளவில் இந்தியாவில் தான் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். வளர்ந்த நாடுகளில் தொழிலாளர்கள் 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை முழுத்திறன் பெற்றவர்களாக விளங்குகிறார்கள். ஆனால் இந்தியாவில் 20 முதல் 24 சதவீதம் தான் உள்ளனர். எனவே நமது இளைஞர்களுக்கு கல்வியுடன் தொழில் திறன் பயிற்சியும் அளிப்பது அவசியம் என்றார்.

மேலும் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழும தலைவர் அனில் சகாசரபுத்தே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா உள்பட பலர் பேசினர்.

கருத்தரங்கில் துணைவேந்தர்கள் எஸ்.கீதாலட்சுமி, பி.துரைசாமி, எஸ்.தங்கசாமி, பாஸ்கரன், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் விவேகானந்தன், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.