கபீர் அகாடமி துவக்க விழாவில் எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி

பதிவு செய்த நாள் : 28 ஜூன் 2018 14:22

மாகர்

அரசியல் உள்நோக்கங்களுக்காக மக்களின் மனதில் குழப்பங்களை ஏற்படுத்துவதை சில கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று சாடினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி லக்னோ விமான நிலையத்திற்கு இன்று வந்தடைந்தார். லக்னோ வந்த அவரை உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதையடுத்து சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள மெகர் நகரில் உயிர்நீத்த கவிஞர் கபீரின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு ரூ.24 கோடியில் கட்டப்படும் செயின்ட் கபீர் அகாடமிக்கான அடிக்கல்லை நாட்டினார்.

பின்னர் கபீரின் 500ஆவது நினைவு ஆண்டிற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை வசைபாடினார். இதில்,”சில கட்சிகள் அமைதி மற்றும் வளர்ச்சியையும் விரும்புவதில்லை. மக்களின் மனதில் அமைதியில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தவே அவர்கள் விரும்புகின்றனர்” என்று மறைமுகமாக சாடினார்.

“அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே இவ்வாறு செய்யும் அந்த கட்சிகளின் வேர் அடியிலேயே வெட்டப்பட்டுவிட்டது. இவர்கள் செயின்ட் கபீர், மகாத்மா காந்தி மற்றும் பாபா அம்பேத்கர் ஆகியோரது நாட்டின் இயல்பை இதுவரை புரிதுகொள்ளவே இல்லை” என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும்,”சமாஜ்வாடி மற்றும் பகுஜன் என்று பேசுபவர்கள் பெரும் சுயநலவாதிகள். அவர்கள் சமூக நலனை பார்க்க மாட்டார்கள். தங்கள் நலனையும் தங்கள் குடும்ப நலனையும் மட்டுமே கருத்தில்கொண்டு செயலாற்றுவார்கள்” என்று சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சாடினார்.

”சில தலைவர்கள் அரசு மாளிகைகள் மீதே அதிக கவனம் செலுத்துவர். ஏழை மக்களுக்கு வீடு இல்லாதது குறித்து என்றும் கவலைப்பட்டது இல்லை” என்று அகிலேஷ் யாதவை மறைமுகமாக கிண்டலடித்தார்.

மேலும்,”முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் பல இடையூறுகள் விளைவிப்பதாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.

அரசியல் லாபம் தேடல்

நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தவர்களும் அதை அப்போது எதிர்த்தவர்களும் இப்பொழுது சில்லரை லாபத்துக்காக கூட்டுச் சேர்ந்துள்ளனர்.

நாட்டில் அமைதியை சீர்குலைப்பதுதான் இவர்கள் நோக்கம். அரசியல் அதிகார ஆசை அவர்களை கூட்டுச்சேர்த்துள்ளது. நட்டின் நலனைப்பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. சொந்த நலன், குடும்ப நலன் பற்றித் தான் அவர்களுக்கு கவலை. 

கலவரம் வந்தால் தங்களுக்கு அரசியல் லாபம் என நினைக்கிறார்கள். அவர்களுக்கு கபீர் வாழ்ந்த மகாத்மா வாழ்ந்த அம்பேத்கார் வாழ்ந்த நாட்டை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று பிரதமர் மோடி கூறினார்.

இக்கூட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் பேர் கலந்து கொண்டனர்..