பதக்கம் வாங்கலையோ! பதக்கம்!!

பதிவு செய்த நாள் : 26 ஜூன் 2018

உலக அளவில் அதிக மக்கள் தொகைகொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 2 இடத்தை பிடித்திருக்கும் நாடுகள் சீனா மற்றும் இந்தியா. இந்த 2 நாடுகளும் அதிவேக பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. எனினும் இந்த 2 நாடுகளுக்கும் இடையில் எத்தனை வேற்றுமைகள்?

விளையாட்டுத்துறையில் கூட ஒற்றுமை இல்லை. ஒற்றுமை இல்லாதது மட்டுமல்ல. இரு நாடுகளும் மலையும் மடுவும் என்ற நிலைதான்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் சீனா மொத்தம் 70 பதக்கங்களை வென்று குவித்தது.ஆனால் இந்தியாவோ 2 பதக்கங்களை மட்டுமே வென்றது.

இதேபோல் ஆசிய விளையாட்டு போட்டிகளை எடுத்துக்கொண்டால், கடந்த 1982 ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற போட்டி முதல் கடைசியாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி வரை சீனாவே பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இவ்வளவுக்கும் இந்த இரண்டு நாடுகளும் 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்டவை.

விளையாட்டு அரங்கில் மட்டும் இந்த இரண்டு நாடுகளுக்கும் ஏன் இவ்வளவு வேறுபாடு உள்ளது? இந்தியா தன் செயல்திறனை மேலும் மேம்படுத்த என்ன செய்வது? ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளின் பதக்கப்பட்டியலில் இந்தியா முன்னேற என்ன செய்யவேண்டும்?

சீனா எப்படி விளையாட்டில் சாதிக்கிறது?

ஒரு தலைசிறந்த விளையாட்டு வீரர் உருவாக முக்கிய காரணம் அவர் சிறு வயது முதலே தீவிர பயிற்சிகளில் ஈடுபடுவது தான். குழந்தை பருவத்தில் இருந்தே கடினமாக பயிற்சிகள் மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.சீனாவில், 3 அல்லது 4 வயது முதலே குழந்தைகள் குறிப்பிட்ட விளையாட்டிற்கான பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அந்த குழந்தைகள் ஒவ்வொரு நாளும் சுமார் 8 முதல் 12 மணிநேரம் வரை கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் வாரத்தின் அனைத்து நாட்களும் இந்த பயிற்சிகள் அதற்கான மையங்களில் நடத்தப்படுகின்றன. இது அந்த குழந்தைகளின் செயல்திறனை மேம்படுத்தும்.

இந்தியாவில்….

இந்தியாவை பொறுத்தவரை இங்குள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவம், பொறியியல் ஆகியவற்றை படிக்கவைத்து அந்த துறைகளில் சிறந்து விளங்கச்செய்யவேண்டும் என்றே கருதுகின்றனர். விளையாட்டை வெறும் பொழுதுபோக்காகவே இந்திய மக்கள் எண்ணுகின்றனர். அது தொழிலாக ஆக முடியாது என்று நினைக்கின்றனர். இதில் தங்கள் குழந்தைகளை விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்க செய்யவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் வெகு சிலரே உள்ளனர்.

விளையாட்டு உள்கட்டமைப்பு

உலக தரத்தை எட்ட தடகள வீரர்களுக்கு சிறந்த மைதானங்கள், உபகரணங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சீனாவில் மட்டும் சுமார் 8,50,000 உடற்பயிற்சிக் கூடங்களும் 3,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வளாகங்களும் உள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான சீன வீரர்கள் பயனடைகின்றனர்.

குத்தகைக்கு நிலங்கள்

உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு தனியாருடன் இணைந்து செயலாற்றவேண்டும். மைதானங்கள், விளையாட்டு வளாகங்களை கட்ட அதிக அளவிலான இடங்கள் தேவைப்படும். அதற்கு குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள நிலங்களின் உரிமையாளர்களிடம் நீண்டகால குத்தகைக்கு வாங்கி அங்கு நமக்கு தேவைப்படும் விளையாட்டு வளாகங்களை எழுப்பிவிடலாம்.அதாவது தனியார், கார்ப்பரேட், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் இருக்கும் நிலங்களில் நமக்கு தேவையான இடத்தை குத்தகைக்கு வாங்குவது. அவர்களுக்கு வரும் வருவாயில் குறிப்பிட்ட பங்கினை கொடுத்து வரலாம். இதில் அந்த தனியார் நிறுவனங்கள் பங்குதாரர்களாக விளங்குவர்.

விளையாட்டுக்கான கட்டமைப்புகளை திட்டமிடுவது, உருவாக்குவது, உருவாக்கியதை மேம்படுத்துவது ஆகிய பணிகளில்  சீன அரசு சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது. சீனாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளுக்கு பிரதான மைதானமாக விளங்கியது ”பேர்ட்ஸ் நெஸ்ட்” (BIRDS NEST) மைதானமாகும். இந்த மைதானம் தனியாருடன் இணைந்து சீன அரசு வடிவமைத்து கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின்மூலம் தங்கள் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்டுத்தும் நாடுகளை பின்பற்றி இந்தியாவும் செயலாற்றவேண்டும்.

அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம்

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றால், எப்படியாவது பதக்கங்களின் எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டே செல்லவேண்டும் என்பதே சீனாவின் முக்கிய இலக்காக இருக்கும். அதற்காக அனைத்து விளையாட்டுகளுக்கும் சீனா முக்கியத்துவம் வழங்கும்.

உதாரணத்திற்கு டிராம்பொலின் என்று சொல்லக்கூடிய ஜிம்னாஸ்டிக் போட்டி கடந்த 2000 ஆம் ஆண்டில்தான் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்பட்டது. இந்த விளையாட்டில் சீனாவின் செயல்திறன் தொடக்கத்தில் மிகவும் மோசமாக இருந்தது. ஆகையால், அந்த விளையாட்டில் தங்கள் வீரர்களின் செயல்திறனை மேம்படுத்த பயிற்சிகள் வழங்க சீன அரசு முடிவுசெய்தது. அதற்கு கூடுதல் நிதியையும் ஒதுக்கியது.

அதன் பயனாக தொடர்ந்து நடைபெற்ற 2008 ஒலிம்பிக் டிராம்பொலின் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றது. மேலும் அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் டிராம்பொலின் விளையாட்டில் ஏதேனும் ஒரு பதக்கத்தையாவது சீனா வென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.சீனா பாய்மரப் படகுப்போட்டி, ரோயிங் என அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கி தங்கள் வீரர்களின் திறமையை வெளிகொண்டு வருகிறது.

இந்தியாவில் சைக்கிளிங், ரக்பி, ட்ரையாத்லான், ஃபென்சிங், டைவிங், கனாயிங், செய்லிங் ஆகிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. ஆகையால் அந்த விளையாட்டுகளின் தரத்தை உயர்த்தவேண்டும். இவ்வாறு செய்தால், இந்த விளையாட்டுகள் தேசிய அளவில் மிகப் பிரபலமாகும். இதன்மூலம் பலர் இந்த விளையாட்டினை கற்றுக்கொள்ள ஆர்வம் ஏற்பட வழிவகுக்கும்.

குறிப்பிட்ட விளையாட்டுகளில் தலைசிறந்து விளங்கியவர்களின் உதவியோடு இளைஞர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். இது சர்வதேச அரங்கில் சிறப்பாக செயலாற்ற உதவியாக இருக்கும்.

வெளிநாட்டு பயிற்சியாளர்கள்

சீனாவில் தங்கள் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்க வெளிநாட்டு பயிற்சியாளர்கள் உதவியை சீனா நாடுகிறது. நீச்சல், பேஸ்பால், பென்சிங் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களுக்கும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பயிற்சிகளை அளிக்கின்றனர். இதன் காரணமாக அவர்களது செயல்திறன் குறிப்பிட்ட விளையாட்டுகளில் மிகவும் அபாரமாக இருக்கிறது.

இந்தியாவிலும் கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இருக்கின்றனர். அவர்களும் பயிற்சிகளும் அளிக்கின்றனர். ஆனால், வெளிநாட்டு பயிற்சியாளர்களிடம் இருந்து பெறப்படும் அதிக அளவிலான உதவி, மற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாதகமாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.

நிதியுதவி

பெரும்பாலான சீன விளையாட்டு வீரர்களுக்கு தங்கள் விளையாட்டே வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. சீனாவின் பல தலைசிறந்த விளையாட்டு வீரர்களும் மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். தங்கப் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு சீன அரசு அதிக அளவிலான வெகுமதிகள் வழங்கி ஊக்குவிக்கிறது.

பல சீன விளையாட்டு வீரர்கள் பணிகள் செய்வதில்லை. தினமும் பயிற்சிகள் அளிக்கின்றனர். அதற்காக சம்பளமும் பெறுகின்றனர். மற்ற நாடுகளை எடுத்துக்கொண்டால், விளையாட்டு வீரர்கள் 6 முதல் 8 மணிநேரம் வரை பணிகளை செய்வர். பின்னர் சில மணிநேரங்கள் மட்டும் பயிற்சிகள் அளிப்பர்.

இந்திய விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தை பொருளாதார அளவில் மேம்படுத்தப்படுவதை அரசு கவனம் செலுத்தவேண்டும். தேசிய அளவிலான பல போட்டிகளில் வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களுக்கு குறைந்த அளவிலான வெகுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் விளையாட்டை அடுத்த கட்ட நிலைக்கு எடுத்துச்செல்ல முடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆனால், சர்வதேச அளவில் சாதனைப் புரியும் விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசும் அதிக அளவிலான வெகுமதிகளை அளித்து கவுரவிக்கின்றன. தேசிய அளவில் தங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் சர்வதேச அரங்கிற்கு செல்ல இயலாமல் பலர் ஒடுக்கப்படுகின்றனர்.

இந்தியாவும் ஒலிம்பிக் போட்டிகளில் தலைசிறந்து விளங்கவேண்டும் என்றால், விளையாட்டு உள்கட்டமைப்புக்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் உயர்த்தப்படவேண்டும். இதன்மூலம், ஒரே நேரத்தில் பல விளையாட்டுகளை விளையாடும் வாய்ப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகங்கள் அமைக்கப்படவேண்டும். விளையாட்டுகளை மேம்படுத்த கொண்டுவரப்படும் திட்டங்களின் திறனை அவ்வப்போது மதிப்பீடு செய்யவேண்டும்.

வீரர்கள் எண்ணிக்கை 

கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 413 சீன வீரர்கள் பங்கேற்றனர். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை வெறும் 124 விளையாட்டு வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர். ஒலிம்பிக்கில் நடத்தப்படும் அனைத்து விளையாட்டுகளிலும் தங்கள் நாட்டை சேர்ந்த வீரர்களை பங்குகொள்ள வைப்பது என்பதில் சீனா கவனமாக உள்ளது இதிலிருந்து தெளிவாக தெரிகின்றது. விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், பதக்கங்களை வெல்லும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

இதில் இந்தியா மேலும் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியமாகும்.

விளையாட்டு சங்கங்களுடன் ஒற்றுமை

விளையாட்டு சங்கங்களுக்கும் வீரர்களுக்கும் இடையிலான உறவு வலுவாக இருக்கவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி அரை இறுதிப்போட்டியில் நடுவர்கள் நியாயமற்ற முறையில் முடிவை அறிவித்தனர்.

இதனால் பெறும் மன உளைச்சலுக்கு ஆளான சரிதா தேவி மேல்முறையீடு செய்யவேண்டி இருந்தது. ஆனால், மேல்முறையீட்டிற்கு தேவையான பணத்தை வழங்க இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு முன்வரவில்லை. இதில் தலையிடாமல் ஒதுங்கி நின்றது. ஆகையால் சரிதா தேவி தன் பயிற்சியாளரிடமும் இந்திய பத்திரிக்கையாளரிடமும் இருந்து 500 டாலர்களை பெற்று அந்த பணத்தை செலுத்தவேண்டிய அவலநிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க விளையாட்டு சங்கங்களும் வீரர்களும் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும். இதுபோன்ற சர்ச்சைகள் நாட்டிற்கு பெறும் கலங்கத்தை ஏற்படுத்தும்.

சீனாவில் விளையாட்டு வீரர்களுக்கும் சங்கங்களுக்கும் இடையே நல்ல உறவு நீடித்து வருகின்றது. இது அனைத்து போட்டிகளின் முடிவுகள் மூலம் புலப்படுகிறது.

தலைசிறந்த வீரர்களுக்கு தலைமை பதவி

இந்தியாவில் உள்ள விளையாட்டு அமைப்புகள், சங்கங்கள் என அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளில் தலைசிறந்து விளங்கிய வீரர்களை தலைமை பொறுப்பில் நியமிக்கப்படவேண்டும். அவர்களுக்கு தான் ஒரு விளையாட்டு வீரரை குறித்து முழுவதும் தெரியும். சர்வதேச அளவில் தங்கள் திறமையை எப்படி வெளிபடுத்துவது என்பதை அவர்கள் நன்கு அறிவர். அதற்கு ஏற்றவாறு அவர்கள் செயலாற்றுவார்கள்.

இந்த விஷயத்தில்தான் சீனா சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது.

பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்

நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் விளையாட்டிற்கு ஒதுக்கப்படும் நேரத்தில் சரியான முறையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றதா? என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அந்த நேரத்தில் மாணவ மாணவிகளை எந்தவொரு வழிகாட்டுதலும் இன்றி விளையாட்டு மைதானத்தில் விட்டுவிடப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்கு தோன்றும்படி விளையாடி திரிகின்றனர். அவ்வாறு செய்யும்போது குறிப்பிட்ட விளையாட்டில் தங்களை மேம்படுத்திக்கொள்ள அவர்களால் இயலவில்லை.சில பள்ளிகளில் விளையாட்டுகளுக்கு தேவைப்படும் சாதனங்களும் சரியாக இருக்காது. எண்ணிக்கை அளவில் குறைந்து இருக்கும் அல்லது இருந்தாலும் அது பழுதாகி இருக்கும். பள்ளி நிர்வாகம் அதற்கு முக்கியத்துவம் வழங்குவதே இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

இது மட்டுமல்லாமல், விளையாட்டிற்காக ஒதுக்கப்படும் நேரங்களில் ஆசிரியர்கள் தங்கள் பாடத்தை மாணவர்களுக்கு நடத்துவர். விளையாட்டு என்பது பொழுதுபோக்கு. வாழ்க்கைக்கு படிப்புதான் முக்கியம் என்று கருதும் சில ஆசிரியர்களின் எண்ணம் மாணவர்களை முடக்கிவிடுகிறது.

மேலும் சில பள்ளிகளில் விளையாட்டிற்கென தனி ஆசிரியர்கள் இருப்பது இல்லை. பாட ஆசிரியர்களே விளையாட்டு ஆசிரியர்களாக செயல்படுகின்றனர். அல்லது விளையாட்டு ஆசிரியர்களே பாட ஆசிரியர்களாகி விடுகிறார்கள். பல வேஷம் போட வேண்டிய அவலம் உள்ளது.

இவை அனைத்தையும் கடந்து தனிப்பட்ட முயற்சியில் குறிப்பிட்ட விளையாட்டில் தங்கள் திறனை மேம்படுத்தும் மாணவ மாணவிகள் மட்டுமே வெளியே தெரிகின்றனர். பள்ளிக் கல்வியை முடித்து உயர்க்கல்வியை படிக்க எண்ணும் அவர்களுக்கு விளையாட்டு மிகவும் உதவுகிறது. பொறியியல் அல்லது மருத்துவ கலந்தாய்வு என எதை எடுத்துக்கொண்டாலும், விளையாட்டு பிரிவிற்காக தனியாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தனி பாடத்திட்டம்

விளையாட்டை அங்கமாகக் கொண்ட பாடத்திட்டம் தேவை.விளையாட்டு பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் கட்டாயமாக மாணவ மாணவிகள் விளையாடவேண்டும். அதில் தேர்வுகள் வைக்கப்படவேண்டும். அதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெறவேண்டும் என்ற கட்டாயம் இருக்கவேண்டும். 

அதில் தலைசிறந்த மாணவ மாணவிகள் தேர்தெடுக்கப்பட்டு கூடுதலாக சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். அவர்களை பள்ளிகளுக்கு இடையில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வைக்கப்படவேண்டும். இந்த போட்டிகள் மூலம் குறிப்பிட்ட விளையாட்டை குறித்த அனைத்து விஷயங்களையும் தெளிவாக அவர்கள் அறிந்துகொள்வர்.

வெள்ளை அறிக்கை

முதலில் மத்திய அமைச்சரவை விளையாட்டு பற்றி ஒரு வெள்ளை அறிக்கையோ அல்லது காவி அறிக்கையோ தயாரிக்க நிதி ஆயோக் அமைப்புக்கு ஆணையிட வேண்டும். 3 மாதத்தில் செயல் திட்டம், தேவைகள், அதற்கான நிதி மதிப்பீடுடன் கூடிய கொள்கை அறிக்கையை தயாரித்து அமைச்சரவைக்கு வழங்க வேண்டும். இப்பணியில் முன்னோடும் பிள்ளையாக விளையாட்டுத்துறை இயங்க வேண்டும்.

இதன் அடிப்படையில் ஓராண்டுத் திட்டங்களைக்கொண்ட 10 ஏண்டு தொகுப்புத் திட்டம் வரையறுக்கப்பட வேண்டும். அது தான் இந்தியாவின் விளையாட்டுத் துறைக்கான பைபிள், தப்பு தப்பு கீதையாக அமைய வேண்டும். இந்த திட்டத்தை வைத்துக்கொண்டு மோடி சவுக்கை எடுத்து சுழற்றினால் காரியம் நடக்காமலா போகும்? எண்ணித் துணிக கருமம்.


கட்டுரையாளர்: தினேஷ் குகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
Vishnu priya 26-06-2018 10:47 PM
Good information. Really it's a very nice article

Reply Cancel


Your comment will be posted after the moderation


Karthickeyan 26-06-2018 11:15 PM
மிக மிக அருமையான உண்மையான நெத்தியடி பதிவு.....

Reply Cancel


Your comment will be posted after the moderation