ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பு நிதி நாளை துவக்கம்

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 20:05

ப்ரஸ்ஸல்ஸ்

    1300 கோடி யூரோக்களை கொண்ட ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பு நிதி நாளை துவக்கப்படுகிறது. இந்த நிதி 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து உற்பத்தி, வளர்ச்சி, ஆராய்ச்சி ஆகிய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் ஆங்கிலோ-பிரெஞ்சு பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு தகவல் அளித்தனர்.

2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளுக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அது முதல் ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உதவும். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஐரோப்பிய யூனியன் உதவ வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது. ஆனால் ஐரோப்பிய யூனியனுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவுகள் பெருக வேண்டுமென்று பிரிட்டன் வலியுறுத்தி வந்தது.

ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்பு தற்போது ரஷ்யாவின் மிரட்டலுக்கு ஆளாகி உள்ளது. அமெரிக்கா நேரத்துக்கு ஒருமாதிரியாக பேசுகிறது. அதனால் அமெரிக்காவை சார்ந்திருப்பதில் இருந்து ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பினை விலக்க வேண்டும். ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பு அதன் உறுப்பினர்கள் கையில் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பு நிதியில் உள்ள 1300 கோடி யூரோக்களில் 890 கோடி யூரோக்கள் புதிய ராணுவத் திறன்களை உருவாக்க பயன்படுத்தப்படும். 410 கோடி யூரோக்கள் பாதுகாப்பு துறை ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும். இதில் அமெரிக்கா, பிரிட்டனுக்கு இடமளிக்க போவதில்லை. ஒரு யூரோவின் மதிப்பு ரூ.79.43 ஆகும். அதே சமயம் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூபாயில் 67.62 ஆகும்.

அமெரிக்கா ஒரு நிறுவனத்துக்கு கடன் வழங்குவதாக இருந்தால் அந்நிறுவனம் அமெரிக்காவில் இருக்க வேண்டும். அமெரிக்கர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனை விதிக்கிறது. ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பு நிதியில் உள்ள பணம் எல்லாம் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் பணம். அந்த பணம் ஐரோப்பிய யூனியன் நிறுவனங்களுக்கு போய் சேருவதுதான் முறையானது. இதில் அமெரிக்காவை பாரபட்சமாக நடத்துவதாக புகார் கூற முடியாது.

ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பு நிதியில் பிரிட்டன் சேர்ந்து பயன்பெற வேண்டுமானால் ஐரோப்பிய யூனியனுடன் சிறப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென்று ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பு நிதி முறைப்படி 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இயங்கத் தொடங்கும். இது ஐரோப்பிய யூனியனுக்கு பாதுகாப்பு சுதந்திரம் வழங்கும் என ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் தெரிவித்தனர்.