தலாய் லாமா உடன் சீனா நேரடியாக பேச்சு நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆலோசனை

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 19:12

வாஷிங்டன்

    சீனாவுக்கு நாளை செல்ல உள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சீனாவுடன் பேச இருக்கிற விஷயங்கள் குறித்து அமெரிக்க செனட்டின் வெளியுறவு கமிட்டி உறுப்பினர்கள் மைக் பாம்பியோவிடம் எழுத்து பூர்வமாக வினா எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த பாம்பியோ, தலாய் லாமா அல்லது அவரது ஆதரவாளர்களுடன் நேரடியாக சீனா பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று வலியுறுத்துவேன் என்று கூறினார்.

அத்தகைய பேச்சுவார்த்தைக்கு முன்னால் எந்தவிதமான முன்நிபந்தனைகளையும் சீன அரசோ தலாய் லாமாவோ விதிப்பது பொருத்தமாக இருக்காது. எனவே முன்நிபந்தனை எதுவும் இருக்க கூடாது. முன்நிபந்தனை இல்லாத நிலையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டால் சீனாவுக்கும் திபெத்திய மதத் தலைவர்களுக்கும் இடையே பதற்றம் குறையும். கருத்து வேறுபாடுகள் களையப்படும் என நம்புவதாக பாம்பியோ தெரிவித்தார்.

சீனா மனித உரிமைகளை மதிக்க வேண்டும். மத நம்பிக்கைகளை அங்கீகாரம் செய்ய வேண்டும். திபெத்திய அரசியல் கைதிகள் அனைவருக்கும் மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென பாம்பியோ தெரிவித்தார்.

கடந்த 2010-ம் ஆண்டுக்கு பிறகு சீன அரசு அதிகாரிகள் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா உடனோ அவரது பிரதிநிதிகளுடனோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனவே இருதரப்பினரும் அர்த்தமுள்ள பயனுள்ள நேரடி பேச்சுவார்த்தைகளுக்கு சம்மதிக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நிலையாகும்.

திபெத்திய பிரதிநிதிகளுக்கும் சீன அரசுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை களைவதற்கு முன்நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைதான் பயன்படும் என்றும் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது எனவும் மைக் பாம்பியோ கூறினார்.

தற்பொழுது 82 வயதாகும் தலாய் லாமா 1959-ம் ஆண்டு திபெத்தில் இருந்து தப்பித்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். தலாய் லாமாவுக்கு அடுத்ததாக மதத் தலைவராக யார் மக்களை வழிநடத்த போகிறார்கள் என்பதை இப்பொழுதே உறுதி செய்ய வேண்டும். திபெத்திய புத்த மத மரபுகளை மீறக் கூடாது என்று சீனா இப்போது பேசி வருகிறது.

சீனா செல்லும் பாம்பியோ சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாடு குறித்து நேரடியாக தகவல்களை சீன அரசுக்கு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிம்-டிரம்ப் பேச்சுவார்த்தையை அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சீனாவின் கருத்துகளை அமெரிக்கா அறிய பாம்பியோவின் பயணம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.