சென்னை காவல்துறைக்கு ஜூன் 30ந்தேதிவரை இரண்டு ஷிஃப்ட் முறை: விஸ்வநாதன் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 19:04

சென்னை,

    சென்னையில் இரவு நேரங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க  மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி இரவில் குற்றங்களை தடுக்க காவல்துறைக்கு இரண்டு ஷிப்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இரவு நேரங்களில் வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இரவில் குற்றங்களைத் தடுக்க காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதையடுத்து, இரவு நேரங்களில் வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர்  இரண்டு ஷிஃப்ட்களில் பணியாற்றும் நடைமுறையை இன்று அறிமுகப்படுத்தினார்.
இந்த நடைமுறை, ஜூன் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதாவது, சென்னை மாநகரில் உள்ள உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், காவல்துறை துணை ஆய்வாளர் ஆகியோரின் கீழ் உள்ள காவலர்கள் இரவு நேரங்களில் 2 ஷிஃப்ட் முறையில் பணியாற்றுவார்கள்.

மேலும், தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்துக்கு தலா 3 ஆணையர்கள் தலைமையில்  பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிஃப்ட் டைம் என்ன?

இரவு நேரங்களில் இரண்டு ஷிஃப்ட்களில் பணியாற்றவிருக்கும் காவல்துறையினர், இரவு 10 மணி முதல் 4 மணி வரை ஒரு ஷிப்ட் நேரத்திலும், அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை இரண்டாவது ஷிப்ட் நேரத்திலும் பணியாற்றுவார்கள்.

அதேபோல வழக்கமான இரவு ரோந்துப் பணியிலும் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் சென்னையில் வழிப்பறி மற்றும் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு ஆகியவை அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரையிலான நேரத்தில் மட்டும் சுமார் 14 இடங்களில் வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதையடுத்து காவல்துறை மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.