எதிர்க்கட்சிகளின் மாபெரும் கூட்டணி- மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடு. அரசியல் நோக்கம் இல்லை என ராகுல் விளக்கம்

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 17:31

மும்பை

    பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை எதிர்க்க அமைக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் மாபெரும் கூட்டணி, மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு அமைக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார். இதில் பேசிய ராகுல் காந்தி,”பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் நாட்டின் அரசியலைப்பையே தாக்குகின்றன” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும்,”நமது நாட்டில் பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை ஆகியோரை எதிர்க்க அமைக்கப்பட்ட பிரம்மாண்ட எதிர்க்கட்சிக் கூட்டணி நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைக்கப்பட்டது. எந்தவொரு அரசியல் உள்நோக்கங்களுக்காகவும் இது அமைக்கப்படவில்லை” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்த மாபெரும் எதிர்க்கட்சிக் கூட்டணியை யார் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வார்? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி மவுனம் சாதித்தார்.

“பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் ஜிஎஸ்டி வரி கீழ் கொண்டுவரவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். அப்படி செய்தால் சாமானிய மக்கள் பயனடைவர். ஆனால், பிரதமர் மோடிக்கு அதில் விருப்பமில்லை” என்று கூறினார்.

“மும்பையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கு பல சிறு தொழில்கள், வர்த்தகர்களும் இங்கு உள்ளனர். தோல் தொழிற்சாலை மற்றும் துணி தொழிற்சாலை என பல தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. இவை அனைத்தும் ஜிஎஸ்டி வரிவிதிப்பினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளன ஒட்டுமொத்த நாடுமே கவலை அடைந்துள்ளது. சிறிய தொழில்புரிவோர் மிகவும் வருத்தமடைந்துள்ளனர். அவர்களுக்காக நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.