சென்னை புழல் மத்திய சிறையில் ரூ.27 கோடி செலவில் புதிய வசதிகள்

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 16:01

சென்னை,

     சென்னை புழல் மத்திய சிறையில் 500 சிறைக் கைதிகளை கூடுதலாக அனுமதிக்கவும் சிறை அலுவலர்களுக்கு குடியிருப்புகளை அமைக்கவும் மொத்தம் 27 கோடி செலவில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

புதிய வசதிகள் சம்பந்தமாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
1.  சென்னை புழல் மத்திய சிறை-2-ல் உள்ள  இட நெருக்கடியை கருத்தில் கொண்டு,  500 சிறைவாசிகளை கூடுதலாக அனுமதித்திடும் வகையில், 15 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.    

2.  புழல் மத்திய சிறை -2, வேலூர், கடலூர், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் பணிபுரிந்து வரும் உதவி சிறை அலுவலர்களுக்கு 50 குடியிருப்புகள், 10 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

3.  சிறைகளுக்குள் சிறைவாசிகள் செல்லிடத் தொலைபேசியை உபயோகப்படுத்துவதை தடுத்திடும் பொருட்டு, ஏற்கனவே 9 மத்திய சிறைகளில் செல்லிடத் தொலைபேசியை செயலிழக்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக,  சென்னை புழல் மத்தியசிறை-1 மற்றும் 2, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை  மற்றும் 5 பெண்கள் தனிச்சிறைகளில் நடப்பாண்டில் 10 கோடியே 10 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் செல்லிடத் தொலைபேசியை செயலிழக்கும் கருவிகள் பொருத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என இவ்வாறு முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.