கர்நாடகா ஜெயநகர் தொகுதி சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வெற்றி

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 13:56

பெங்களூரு

    கர்நாடகாவில் உள்ள ஜெயநகர் தொகுதிக்கான சட்டமன்ற தேர்தலில் 2,800 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி இன்று வெற்றிபெற்றுள்ளார்.

கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளராக விஜயகுமார் எம்எல்ஏ நிறுத்தப்பட்டிருந்தார். அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
விஜயகுமார் கடந்த மே மாதம் 4ஆம் தேதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார். இதையடுத்து ஜெயநகர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. கர்நாடகத்தில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் 11ஆம் தேதி (நேற்று முன்தினம்) ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் பாஜக சார்பில் மரணமடைந்த விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத் நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டியின் மகள் செளமியா ரெட்டி களம் இறங்கினார். இந்த தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி போட்டியில் இருந்து விலகிக்கொண்டது. அக்கட்சி காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தது. அதன்படி அன்றைய தினம் தேர்தல் நடந்தது. இதில் 55 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், ஜெயநகர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு துவங்கியது. இதில் துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செளமியா ரெட்டி முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி 54,457 வாக்குகள் பெற்றிருந்தார். பாஜக வேட்பாளர் பிரகலாத் 51,568 வாக்குகள் பெற்றிருந்தார்.

இதன்படி, 2800 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செளமியா ரெட்டி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அக்கட்சியின் பலம், 79 ஆக தற்போது உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.