உத்தர பிரதேச அரசியலில் புதிய “பீம சேனை” உதயம்

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2018 19:03

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலத்தில் தாங்கள் தேர்தலில் போட்டியிடாமல், தேர்தலில் போட்டியிடும் தலித்துகளுக்கு ஆதரவாகவும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு துணையாகவும் செயல்பட போவதாக அறிவித்து கொண்டு, பீம சேனை என்ற தலித் அமைப்பு உருவாகி உள்ளது.

இந்த தலித் அமைப்பு 2017-ம் ஆண்டு சஹரான்பூரில் கலவரம் வெடித்த போது தோன்றியது. சஹரான்பூர் கலவரத்துக்காக அதன் நிறுவனர் சந்திரசேகர் இன்னும் சிறையில் இருக்கிறார். அவரை விடுவிப்பதுதான் தங்களது முதல் நோக்கம் என்று பீம சேனையின் தலைவராக உள்ள வினய் ரத்தன் சிங் கூறியுள்ளார்.

நாங்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை. அம்பேத்கரின் வழியில் நடப்பவர்கள். சமூகத்தில் தலித்துகளின் மேம்பாட்டுக்காக உழைப்பவர்கள் என ரத்தன் சிங் கூறினார்.

பாஜகவின் ஆர்எஸ்எஸ் அமைப்பும் கூட வகுப்புவாத அரசியலில் ஈடுபடுகின்றனர். வகுப்புவாத அரசியல் காரணமாக சாதி வெறியும் மத வெறியும் கலவரங்களும் வன்முறைகளும் தோன்றுகின்றன. அதனால்தான் நாங்கள் பாஜகவையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் எதிர்க்கிறோம்.

வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபடுவோம். தனிப்பட்ட முறையில் சில தலைவர்களை ஒதுக்கும்படி கூட நாங்கள் வேண்டுகோள் விடுக்கலாம். அவ்வாறு செய்வதால் நாங்கள் அரசியலில் குதித்து விட்டோம் என்று அர்த்தமல்ல.

கல்வி வளர்த்தல், மதுவை விலக்குதல், பள்ளியில் பாதியில் படிப்பை நிறுத்தியவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் ஆகிய சமூக பிரச்சினைகளையும் நாங்கள் கையிலெடுத்து கொண்டு எங்களுக்கு அரசியல் லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாததால் பயமும் கிடையாது என வினய் ரத்தன் சிங் கூறினார்.

அரசியல் கட்சிகள் அல்லது சமூக சேவை அமைப்புகள் பார்க்க தவறுகிற பிரச்சினைகளை நாங்கள் கூர்ந்து கவனிக்கிறோம். அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாடுபடுகிறோம் என்று வினய் கூறினார்.

பீம சேனையை தலித் அமைப்புகள் எல்லாம் வரவேற்பதாக கூற முடியாது. பீம சேனை பாஜக உருவாக்கிய ஒரு அமைப்பு என மாயாவதி ஈவு இரக்கமின்றி விமர்சனம் செய்துள்ளார். ஆனாலும் சமீபத்தில் கைரானா மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த போது எதிர்க்கட்சிகளின் வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி பீம சேனை பிரச்சாரம் செய்தது.

கிராமம் கிராமமாக பீம சேனையின் தொண்டர்கள் சென்று அடித்தட்டு பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். உத்தர பிரதேச மாநிலத்தின் மேட்டுப் பகுதியில் பீம சேனைக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.

சந்திரசேகரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டுமென்று டில்லியில் பேரணி நடத்த பீம சேனை நடவடிக்கை மேற்கொண்டது. டில்லி போலீசார் அனுமதி தரவில்லை. போலீசார் அனுமதி இல்லாத நிலையிலேயே ஜந்தர்-மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பீம சேனை தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

கிராமம் கிராமமாக சென்று அடித்தட்டு மக்கள் மத்தியில் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் வேலையை பீம சேனை தொடர்ந்து செய்தால் எதிர்க்கட்சிகளுக்கு லாபம்தான். பாஜகவுக்கு சிக்கல்தான்.