காற்று மாசுபாட்டால் சத்துக்கள் இல்லாத தானியம் விளைச்சல்

பதிவு செய்த நாள் : 05 ஜூன் 2018

இன்று உலக சுற்றுச்சூழல் தினம். இந்நாளை ஓட்டி வெளியிடப்படும் சிறப்புக்கட்டுரை இது,

உலகம் முழுவதும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் மனிதனால் இன்று நிம்மதியாக சுவாசிக்க முடிவதில்லை.

சுத்தமான காற்றுக்கு இன்று பஞ்சம் ஏற்பட்டுவிட்டது.

உலக சுகாதார மையம் நடத்திய ஆய்வில் உலக மக்கள் தொகையில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதாகவும் அதனால் மக்களின் ஆயுட்காலம் குறைந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

தொழிற்புரட்சி ஏற்படும் முன் உலகின் காற்று மாசு அளவு 280 பிபிஎம் ஆக இருந்தது. அதன் பின் தொடர்ந்து அதிகரித்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் காற்று மாசு அளவு 400 பிபிஎம்(ppm) விட அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் வரும் 2050ம் ஆண்டுக்குள் கரிமில வாயு அளவு 545 முதல் 585 பிபிஎம் ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிபிஎம் என்பது காற்றில் உள்ள மாசு பொருட்களின் அளவை குறிப்பிடும் அளவுகோல். சொதனைக்கு உட்படுத்தப்படும் காற்றில் பத்துலட்சத்தில் எத்தனை பங்கு மாசுப்பொருள்கள் உள்ளன என்பது காற்று மாசின் அளவைக் குறிப்பிடுகிறது,  காற்று மாசால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏராளம். புவி வெப்பம் அதிகரிப்பதால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதன் காரணமாக உலகளவில் புயல், சூறாவளி, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

நவீன கால மனிதர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதால் தான் தற்போது காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் எந்த அளவு பாதிக்கப்படுகின்றன என்பது பற்றி சர்வதேச அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் காற்று மாசு 

மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் காற்று மாசு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் உலக சுகாதார மையம் அதிக காற்று மாசு கொண்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் முதல் 15 இடங்களில் உள்ள நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை. இந்த தகவல் நம் ஆபத்தான சூழ்நிலையை தெளிவாக தெரிவிக்கிறது. .

அந்த பட்டியலில் கான்பூர் முதல் இடத்திலும், டில்லி 6ம் இடத்திலும் உள்ளன. மேலும் அதிக மாசு கொண்ட பெருநகரங்களின் பட்டியலில் தலைநகர் டில்லி முதல் இடத்திலும் மும்பை 4ம் இடத்திலும் உள்ளன.

டில்லியில் அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், குப்பை எரிக்கும் ஆலைகள் மற்றும் ஹரியானா, பஞ்சாப் ஆகிய ஆண்டை மாநிலங்களில் விவசாயிகள் அறுவடைக்கு பின் வைக்கோலை எரிக்கும் நடைமுறை ஆகியவை அங்கு காற்று மாசு அதிகரிக்க காரணம். அங்கு வாழும் குழந்தைகள், பெரியோர்கள் என பெரும்பாலான மக்கள் தங்கள் முகத்தை மூடியப்படி தான் தெருக்களில் நடமாடுகிறார்கள்.

டில்லியின் காற்று மாசு அளவை குறைப்பதற்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு புதிய யோசனையை முன்வைத்தார். அதன் படி ஒரு நாளைக்கு ஒற்றப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் மட்டுமே சாலையில் செல்லலாம். மறுநாள் இரட்டைப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் செல்லலாம். இவ்வாறு வாகனங்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதே அந்த திட்டத்தின் நோக்கம்.

முதலில் சோதனை முறையில் இந்த திட்டம் ஜனவர் 1, 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் கடந்த 2017ம் ஆண்டில் தொடர்ச்சியாக அந்த விதி அமல்படுத்தபப்ட்டது. பலருக்கு சிரமங்கள் ஏற்பட்டாலும் இந்த நடைமுறையால் காற்று மாசு சற்று குறைந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த திட்டம் கைவிடப்பட்டது. 2018ம் ஆண்டிலும் இந்த திட்டத்தை கொண்டுவர முயற்சிகள் நடந்தன. ஆனால் சாத்தியம் ஆகவில்லை

காற்று மாசு அதிகரிப்பால் இந்தியாவில் ஆண்டுதோறும் வெப்பநிலை மற்றும் மழை அளவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது, வெப்பநிலை உயர்கிறது. ஆனால் மழை குறைகிறது.இதனை நாம் கண்கூடாக காண்கிறோம்.

அதிக விளைச்சல், குறைவான தரம்

காற்று மாசு அதிகரித்து வருவதால் காற்றில் கரிமிலவாயுவின் அளவு அதிகமாக விடுகிறது,. இதன் தாக்கம் விவசாயத்திலும் பயிர் உற்பத்தியிலும் எதிரொலிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பொதுவாக செடிகள் காற்றில் உள்ள கரிமிலவாயுவை சுவாசித்து அதன் மூலம் உணவை தயாரிக்கின்றன. தற்போது காற்றில் கரிமிலவாயுவின் அளவு அதிகரித்து வருகிறது. இந்த சூழல் செடிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்  என்பது நிதர்சனம்.

முக்கியமாக கரிமிலவாயுவின் அளவு அதிகரிப்பதால் உணவு தானியங்களின் விளைச்சல் அடுத்த 50 ஆண்டுகளில் பல மடங்காக உயரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மக்களுக்கு நல்லது தானே என அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசியல் தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் முக்கியமான விஷயத்தை உணரவில்லை.
ஒரு பொருளின் எண்ணிக்கை அல்லது அளவு அதிகரித்தால் மட்டும் போதுமா? அதன் தரமும் உயர்ந்தால் தானே மக்களுக்கு அது பலனளிக்கும். தானிய உற்பத்தி அதிகரிப்பதோடு அதன் ஊட்டச்சத்து

தரமும் உயர்ந்தால் தான் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை பாதுகாக்கப்படும். அமெரிக்காவை சேர்ந்த இராகி லோலாட்சி என்ற கணித நிபுணரின் மனதில் முதன் முதலாக 17 ஆண்டுகளுக்கு முன் இது பற்றிய கேள்வி எழுந்தது. அதன் பின் கணித படிப்புடன் அவர் தாவரவியல் சார்ந்த ஆராய்ச்சிகளிலும் கவனம் செலுத்தினார்.

உலகம் முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகளை திரட்டி ஆராய்ந்ததில் அவரது சந்தேகம் உறுதியானது. அதிகரிக்கும் கரிமிலவாயுவால் உலகில் உள்ள ஒவ்வொரு இலையும் அதிகப்படியான மாவுசத்து உற்பத்தி செய்வதை லோலாட்சி கண்டுபிடித்தார்.

கடந்த 50 முதல் 70 ஆண்டுகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் முக்கிய ஊட்டச்சத்துக்களான புரதம், வைட்டமின் மற்றும் தாது உப்புகளின் அளவு குறைந்து வருவதை பல ஆராய்ச்சி முடிவுகள் கண்டறிந்தன.

அதிக உற்பத்தி தரும் காய்கறி, பழ ரகங்களை தேர்ந்தெடுத்து விவசாயிகள் தொடர்ந்து பயிறுட்டு வருவதே இதற்கு காரணம் என விஞ்ஞானிகள் கூறினர். ஆனால் இராகி லோலாட்சி உட்பட சில விஞ்ஞானிகளுக்கு மட்டும் பயிர்களின் ஊட்டச்சத்து குறைப்பாடுக்கு இது மட்டும் காரணமல்ல என்பது தெளிவாக தெரிந்தது.

விளையும் பயிர்களில் குறையும் ஊட்டச்சத்துகள்

காற்றில் அதிகரிக்கும் கரிமிலவாயு காரணமாகவே உணவு பயிர்களின் ஊட்டச்சத்து அளவு வெகுவாக குறைவதாக இராகி லோலாட்சி உறுதியாக நம்பினார். அவர் தேடியெடுத்த ஆயிரக்கணக்கான ஆய்வு கட்டுரைகளில் 1997ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மட்டும் அதிகரிக்கும் கரிமிலவாயுவால் அரிசியில் இரும்பு மற்றும் துத்தநாகத்தின் அளவு குறைவது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

இறுதியில் இராகி லோலாட்சி தான் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் கரிமிலவாயு அதிகரிப்பதற்கும் உணவு பயிர்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டிற்கும் தொடர்பு இருப்பதை எழுதி ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.

இந்த விவகாரம் குறித்து முதல் ஆய்வு கட்டுரை சமர்பித்தவர் இராகி லோலாட்சி. கரிமிலவாயு அதிகரிப்பால் உணவு தானியங்களும் துரித உணவு போல் ஊட்டச்சத்து இல்லாமல் மாறி வருவதை தன் கட்டுரையில் தெரிவித்தார்.

முதலில் அவரது ஆராய்ச்சிக்கு யாரும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அவர் மேற்கொண்டு ஆய்வு நடத்த யாரும் உதவ முன்வரவில்லை. ஆனால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தன் முயற்சியை இராகி லோலாட்சி கைவிடவில்லை.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த விவகாரம் பலரது கவனத்தை பெற்றுள்ளது. சில விஞ்ஞானிகள் இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர ஆரம்பித்துள்ளனர். இந்த மாற்றத்திற்கு இராகி லோலாட்சியின் விடா முயற்சி முக்கிய காரணம்.

உலளவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் காற்றில் அதிகரிக்கும் கரிமிலவாயுவால் நாம் தினமும் சாப்பிடும் அரிசி, கோதுமை, சோயா உள்ளிட்ட பல உணவு பயிர்களில்,புரதம், இரும்புசத்து, துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளின் அளவு குறையும் என்பதை கண்டறிந்தன.

உலகளவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள்

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் வரும் 2050ம் ஆண்டுக்குள் அரிசி, கோதுமை, சோளம், சோயாபீன்ஸ், பயிறுவகைகளின் ஊட்டச்சத்துகள் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட 7 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 

அந்த ஆய்வின் தகவல்படி வரும் 2050ம் ஆண்டுக்கு பின் அரிசியின் புரத சத்துகள் 7.8 சதவீதம் குறையும். அதேப்போல் கோதுமையில் 6.3 சதவீதம், சோளத்தில் 4.6 சதவீதம் குறையும் என தெரியவந்துள்ளது.

அதேப்போல் இரும்பு மற்றும் துத்தநாகம் (zinc) அளவு அரிசியில் 5.2 மற்றும் 3.3 சதவீதம், கோதுமையில் 5.1 மற்றும் 9.3 சதவீதம், சோளத்தில் 5.8 மற்றும் 5.2 சதவிதம் குறைய வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் இது போன்ற ஆய்வு ஜப்பானின் டோக்கியோ பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். சீனா மற்றும் ஜப்பானில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் நெல் பயிரிட்டனர். நெற்பயிர்களின் மேலே 30 சென்டிமீட்டர் உயரத்தில் பிளாஸ்டிக் குழாய் அமைத்து அதன் மூலம் கரிமில வாயுவை செலுத்தினர். 2050ம் ஆண்டுக்கு பின் இருப்பதை போல் 568-590 பிபிம் கரிமிலவாயுவில் நெற்பயிர்கள் வளர்வதை உறுதி செய்தனர்.

பின் அங்கு விளைந்த அரிசியை எடுத்து பரிசோதனை செய்தனர். பரிசோதனையின்  முடிவில் அதிக கரிமிலவாயுவின் கீழ் விளைந்த அந்த அரிசியில் ஊட்டச்சத்துக்கள் குறைந்துள்ளதை கண்டறிந்தனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகளின்படி வரும் 2050ம் ஆண்டுக்கு பின் காற்று மாசு அதிகம் உள்ள இடங்களில் விளையும் அரிசியில் புரதம், வைட்டமின்களான பி1, பி2, பி5 மற்றும் பி9, தாது உப்புகளான இரும்பு, துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துகளின் அளவு குறைவாக இருக்கும் என விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.

ஆறுதல் தரு விஷயம் என்னவென்றால் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் பலவகை அரிசி ரகங்களை ஆராய்ச்சியில் பயன்படுத்தினர். ஆனால் அனைத்திலும் இந்த ஊட்டச்சத்து இழப்பு ஏற்படவில்லை. இந்த ஒரு விஷயம் இந்த பிரச்சனைக்கு எதிர்கால தீர்வாக அமையலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  சில வகை நெல்களில் மட்டுமே ஊட்டச்சத்து குறைந்தது எனபதைக் கண்டுபிடித்தனர்.

காற்றில் கரிமிலவாயு உயர்வதால் தானியங்களை போல் கிழங்கு வகைகளும் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக உருளைகிழங்கில் உள்ள புரதம் 3 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. மேலும் வைட்டமின் சி, கொழுப்பு அமிலங்கள், அமினோ ஆசிட், தாது உப்புகள் ஆகியவற்றின் அளவும் குறையலாம்.

கீரைகளிலும் இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற தாதுக்கள் அளவு குறையும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் தானியங்கள் மற்றும் கிழங்கு வகைகளில் அதிகரிக்கும் மாவு சத்து காரணமாக என்ன விளைவுகள் ஏற்படும், மக்கள் உடல்நலனில் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகள், பூச்சிகள், நுண்ணுயிர்களையும் இந்த பிரச்சனை தாக்கலாம் என விஞ்ஞானிகள் அஞ்சுகிறார்கள். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் இது உறுதி செய்யப்பட்டது.  அமெரிக்காவில் தேனிக்களுக்கு அதிக புரதம் தரும் உணவாக இருப்பது கோல்டன் ராட் (Golden rod) என்ற செடியின் பூக்களில் உள்ள மகரந்த தூள்கள்.

ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த பூக்களின் மகரந்த தூள்களில் உள்ள புரதம் குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதற்கு காற்றில் கரிமிலவாயு அதிகரிப்பதே காரணம் என்பதையும் உறுதி செய்துள்ளனர். உலகில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

உடல்நல பிரச்சனைகள் 

உலகின் பெரும்பாலான மக்கள் அரசி, கோதுமை மற்றும் சோளம் போன்ற தானியவகைகளை அடிப்படை உணவாக கொண்டுள்ளனர். எனவே காற்று மாசால் ஏற்படும் இந்த ஊட்டச்சத்து இழப்பு மக்களின் உடல்நலனை பெரிதும் பாதிக்கும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உடல் வலிமைக்கு புரதம் மிகவும் அவசியம். வளரும் நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் புரதச்சத்துக்கு தானியங்கள் மற்றும் பயிறுவகைகளை தான் அதிகம் சார்ந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் எதிர்காலத்தில் பயிர்களின் ஊட்டச்சத்துகள் குறைந்தால் தற்போது ஏழை மக்களுக்கு கிடைக்கும் சொற்ப அளவிலான ஊட்டச்சத்துகள் கூட நாளை கிடைக்காமல் போகும்.

இந்தியா, வங்கதேசம் போன்ற வளரும் நாடுகளை சேர்ந்த மக்கள் மாமிச உணவுகளை  சாப்பிட்டாலும் அதன் அளவு வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் போது மிக குறைவு.

அதேப்போல் கீரைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஏற்படும் முக்கிய வைட்டமின் மற்றும் தாது உப்புகளின் இழப்பு வளரும் நாடுகளில் உள்ள்  மக்களிடையே ஊட்டச்சத்து குறைப்பாடால் ஏற்படும் பல்வேறு உடல்நல பாதிப்புகளை அதிகரிக்கும்.

பருவநிலை மாற்றத்தால் வரும் 2050ம் ஆண்டுக்குள் சுமார் 2.5 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடால் 5 வயதுக்குள் மரணமடைய வாய்ப்புள்ளதாக உலக சுகாதார மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு தானியங்களில் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பும் முக்கிய காரணமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

உலக அளவில் ரத்தசோகையால் சுமார் 200 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயிர்களில் ஏற்படக்கூடிய இரும்பு சத்து மற்றும் துத்தநாகம் குறைப்பாடு ரத்தசோகை பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும். முக்கியமாக கருவில் வளரும் சிசு, கர்ப்பிணி பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மரபணு மாற்றம் 

பயிர்களில் ஏற்படும் ஊட்டச்சத்துகளின் இழப்பை தடுக்க அதிக கரிமிலவாயுவை தாங்கும் திறன் கொண்ட விதைகளை மரபணு மாற்றம் மூலம் உருவாக்கலாம் என விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.

ஜப்பானில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பயன்படுத்திய அனைத்து ரக அரிசிகளிலும் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படவில்லை. எனவே இதுபோன்ற தன்மை கொண்ட தானிய ரகங்களை கண்டறிந்து ஆராய்ச்சி மேற்கொள்வது சரியான தீர்வை தரலாம் என்றும் கூறுகிறார்கள்.

மரபணு மாற்றம் இந்த பிரச்சனைக்கு முழு தீர்வாக அமையாது என்றாலும் ஓரளவு அதன் தாக்கத்தை குறைக்கும். மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வழி ஏற்படும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
எனினும் இதை சாத்தியமாக்குவது அவ்வளவு சுலபமல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அதற்கான காரணங்கள் மரபணு ஆராய்ச்சிக்கான செலவை ஏற்க அரசுகள் தயங்கலாம், மரபணு விதைகளின் அதிக விலை விவசாயிகளுக்கு பிரச்சனையாக அமையலாம்.
மேலும் பாரம்பரிய விவசாய முறைகளை பின்பற்றும் விவசாயிகள் மற்றும் நாடுகள் இந்த விதைகளை ஏற்க மறுக்கலாம். இதுபோன்ற காரணங்களால் இந்த திட்டம் முழு பலனை தராமல் போக வாய்ப்புண்டு

.சுற்றுச்சூழல் பாதுகாப்பு  

காற்று மாசை குறைத்து பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதே பயிர்களின் ஊட்டச்சத்துகள் இழப்பை தடுப்பதற்கான நிரந்தர தீர்வு. சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் விஷயங்களை மனிதர்கள் படிப்படியாக கைவிட வேண்டிய தருணம் இது.

உலகின் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த கடந்த 2015ம் ஆண்டு ஐநாவின் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் 190க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

அந்த ஒப்பந்தத்தின் படி உலக நாடுகள் அதிக கார்பன் வாயுவை வெளியிடும் செயல்பாடுகளை நிறுத்தி அதற்கு மாற்று வழியை பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். காற்று மாசை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களை கண்டறிவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பருவநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும்.

இந்தியா, சீனா போன்ற நாடுகள் இதை பின்பற்ற துவங்கிவிட்டன. காற்று மாசு ஏற்படுத்தும் நிலக்கரி, பெட்ரோல், போன்ற எரிப்பொருள்களுக்கு பதிலாக சூரியமின்சக்தி, எல்.பி.ஜி எரிவாயு, மின்சார வாகனங்கள் போன்றவற்றை  சிறிது சிறிதாக அமல்படுத்தி வருகின்றன.

பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் காற்று மாசு மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரிப்பை தடுப்பதில் பல சவால்கள் உள்ளன. சிலர் அது சாத்தியமாவது கடினம் என்றும் கூறுகிறார்கள்.

இருப்பினும் இந்த விஷயத்தில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து திவிரமாக செயல்பட வேண்டும். இயற்கை வளங்களை சுரண்டாமல் பாதுகாக்க வேண்டும்.

ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் காற்று மாசை கட்டுப்படுத்தவதன் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். பிறருக்கு உணர்த்த வேண்டும். வருங்கால சந்நதியினருக்கு சிறந்த எதிர்காலத்தை விட்டு செல்ல வேண்டியது நம் கடமை.கட்டுரையாளர்: சி.நிரஞ்சனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation