ஓல்டு இஸ் கோல்டு 20–3–16

பதிவு செய்த நாள்

19
மார்ச் 2016
22:16

பாடகர் எஸ்.பி.பி. கதையின் நாயகனாக நடித்த முதல் படம்!

மறைந்த இயக்குனர் கே. பாலசந்தரிடம் உதவியாளராகப் பணியாற்றிய வஸந்த் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் ‘கேளடி கண்மனி’. கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘கேளடி கண்மணி’ என்று துவங்கும் பாடலின் வார்த்தைகளையே தான் இயக்கும் முதல் படத்துக்கு தலைப்பாக்கிக் கொண்டார் வஸந்த்.

 1990ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், ரமேஷ் அரவிந்த், ஜனகராஜ், பூர்ணம் விஸ்வநாதன், விவேக், ராதிகா, அஞ்சு, கீதா, கவிதாலயா கிருஷ்ணன், பேபி நீனா…உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.இளையராஜா இசையமைப்பில் வாலி, மு.மேத்தா பாடல்கள் எழுதியிருந்தார்கள்.பாவலர் வரதராஜனின் பாடல் ஒன்றை இளையராஜா பயன்படுத்தியிருந்தார். விவேக்சித்ரா ஏ. சுந்தரம் இப்படத்தைத் தயாரித்திருந்தார்.

படம் பற்றி பார்ப்போம்…

 மனைவியை இழந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், தன் ஒரே மகள் அஞ்சுதான் தனது உலகம் என்று வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் தன்னுடன் படிக்கும் ரமேஷ் அரவிந்தைக் காதலிக்கிறார் அஞ்சு.

 அஞ்சுவுக்கு அடிக்கடி தலைவலி வருகிறது. சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்லும்போது, அறுவை சிகிச்சைதான் தீர்வு என்று சொல்கிறார் மருத்துவர். ரமேஷ் அரவிந்திடம் தன் உடல்நிலை குறித்து விவரிக்கும் அஞ்சு, தன் மனதில் வடுவாகப் பதிந்திருக்கும் சிறு வயது சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

 சிறு வயதில் அஞ்சு பள்ளியில் படிக்கும்போது அவருக்கு டியூஷன் சொல்லித்தர வருகிறார் ராதிகா. திருமண வயதைத் தாண்டி முதிர் கன்னியாக இருக்கும் ராதிகாவுக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கும் ஏற்படும் அறிமுகம் நல்ல நட்பாக மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வருகின்றனர்.

 ஒரு முறை மழையில் தொப்பலாக நனைந்து வந்த ராதிகாவுக்கு இறந்து போன தன் மனைவியின் புடவையை மாற்றுத் துணியாகக் கொடுக்கிறார் எஸ்.பி.பி. அம்மாவின் புடவையை வேறொருவர் கட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிறுமி அஞ்சு அடம் பிடிக்க, செய்வதறியாது திகைக்கிறார் எஸ்.பி.பி. 

 அம்மாவின் புடவையையே வேறொரு பெண்மணி கட்டுவதைப் பொறுத்துக் கொள்ளாத தன் மகள், அம்மாவின் இடத்தில் வேறொரு பெண்மணியை எப்படி அனுமதிப்பாள் என்று யோசிக்கிறார் எஸ்.பி.பி. விளைவு? ராதிகாவை திருமணம் செய்து கொள்ள இருந்த திட்டத்தை கைவிடுகிறார்.

 இப்போது பருவ வயதில் இருக்கும் அஞ்சு, சிறு வயதில் தான் செய்த தவற்றை நினைத்து வருந்தி, அதற்குப் பிராயச்சித்தம் செய்ய நினைக்கிறார். ராதிகா எங்கு இருக்கிறார் என்பதைத் தேடிக் கண்டுபிடித்து அவரை எஸ்.பி.பியுடன் இணைத்து வைக்க வேண்டும் என்று ரமேஷ் அரவிந்திடம் கூறுகிறார்.

 இறுதியில் பெங்களூரு பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றும் ராதிகாவைத் தேடிக் கண்டுபிடித்து அவரை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைத்து வைக்கிறார்கள் அஞ்சுவும் ரமேஷ் அரவிந்தும்.

 ‘கேளடி கண்மணி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்து 206 நாட்கள் ஓடியது.

  இரண்டாவது சிறந்த படமாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டது.

தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது கவிஞர் வாலிக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கும் கிடைத்தது.

  பிலிம்பேர் பத்திரிகையின் சிறந்த நடிகைக்கான விருது ராதிகாவுக்கு இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது.

  இந்தப் படத்திற்கு முன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், படம் முழுவதும் வருகிற மிக முக்கியமான பாத்திரத்தில் அவர் நடித்த முதல் படம் ‘கேளடி கண்மணி’.

  இந்தப் படத்துக்காக மூச்சு விடாமல் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியதாக சொல்லப்பட்ட ‘மண்ணில் இந்த காதல்’ என்று தொடங்கும் பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.

  மேலும் இப்படத்தில் இடம்பெற்ற ‘என்ன பாடுவது’, ‘கற்பூர பொம்மை ஒன்று,’ ‘நீ பாதி நான் பாதி,’ ‘தென்றல்தான்’ போன்ற பாடல்களும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

  ‘ஓ பப்பா லாலி’ என்ற பெயரில் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது இந்தப் படம்.

-– எஸ். கணேஷ்