ம.பி.யில் வருகைப் பதிவேட்டின்போது பள்ளி மாணவர்கள் 'ஜெய் ஹிந்த்' கூற வேண்டும்: அரசு உத்தரவு

பதிவு செய்த நாள் : 16 மே 2018 20:53

போபால்,

மத்தியப்பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் வருகைப் பதிவேட்டின் போது, 'ஜெய் ஹிந்த்' சொல்ல வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநில பள்ளிக்கல்வித் துறை செவ்வாயன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை செயலர் பிரமோத் சிங் கையெழுத்திட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாநிலம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் தற்பொழுது வருகைப் பதிவேட்டின் பொழுது பல்வேறு விதமான வார்தைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அவற்றை ஒழுங்கு செய்யவும், மாணவர்களிடையே தேசப்பற்றை விதைக்கும் பொருட்டும், பள்ளி மாணவர்கள் வருகைப் பதிவேட்டின் பொழுது, 'ஜெய் ஹிந்த்' சொல்ல வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீபக் ஜோஷி, 'அரசின் இந்த உத்தரவில் என்ன சமூகத் தீமை உள்ளது? அனைத்துத் தரப்பினரும் இதனை நேர்மறையாக பார்க்க வேண்டும் என்றும், இந்த உத்தரவு அரசு பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக செப்டம்பர் 2017-ஆம் ஆண்டு அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குன்வர் விஜய் ஷா இந்த திட்டம் சோதனை முறையில் மத்தியப் பிரதேசத்தின் விந்தயான் பகுதியில் உள்ள சத்னா மாவட்ட அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படுமென்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த திட்டம் செய்லபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.