மகாராஷ்டிராவில் டிராபிக் போலீஸ் சீருடையில் ‘பாடி கேமரா’ அறிமுகம்

பதிவு செய்த நாள் : 16 மே 2018 20:45

மும்பை
    சாலை விதிமுறையை மீறுபவர்களைக் கண்காணிக்கவும் போலீசார் லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் வகையிலும் மகாராஷ்டிராவில் போக்குவரத்து போலீசார் சீருடையில் ‘பாடி கேமரா’ பொருத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து போலீசார் சீருடையில் பாடி கேமரா பொருத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேமராக்கள் மூலம் போலீசார் மற்றும் வாகன ஓட்டிகளின் தொடர்பு, வாகனங்களின் நடமாட்டம் ஆகியவற்றைத் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.

சிறிய அளவில் உள்ள இந்த கேமரா உதவியுடன் வாகன ஓட்டிகள் செய்யும் குற்றங்கள் மற்றும் போக்குவரத்து போலீசாரின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மையை அறிய முடியும். போக்குவரத்து போலீசாரின் சீருடையில் பொருத்தப்படும் வகையில் பாடி கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய, பீட் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீதர், இதன் மூலம், போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்ய முடியும். சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், முதலில் 10 போக்குவரத்து போலீசார் சீருடையில் பாடி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.