சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

பதிவு செய்த நாள் : 16 மே 2018 20:43

பெங்களூரு,

கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் முனைப்போடு செயல்படும் பாஜகவின் பிடியில் இருந்து காப்பாற்ற, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

மதசார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர் குமாரசாமி, இன்று மாலை 5:30 மணியளவில் ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து, கர்நாடகாவில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு வலியுறுத்தினார். அவருடன், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பரமேஸ்வராவ் மற்றும் எம்எல்ஏக்கள் உடன் சென்றனர்
கர்நாடக ஆளுநருடன் மஜத தலைவர் குமாரசாமி சந்தித்த போது 118 எம்எல்ஏக்களின் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 78 பேரும், சுயேட்சை எம்எல்ஏக்கள் 2 பேரும் மைசூரு சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான சொகுசு விடுதியில் தங்க வைக்கப்படுவதற்காக 2 சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுவதாக  செய்திகள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாகவும், அமைச்சர் பதவி மற்றும் ரூ.100 கோடி பணம் தரப்படும் என்று பாஜக தரப்பில் பேசப்பட்டதாகவும் குமாரசாமி கூறியுள்ளார்.

தங்களது 4 எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேச முயற்சித்ததாகவும் குமாரசாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களிடம் எப்படியாவது குதிரை பேரத்தில் ஈடுபட்டு, ஆட்சியமைக்க முயற்சிக்குமாறு பாஜகவினருக்கு மோடி உத்தரவிட்டிருப்பதாக, சித்தராமையா கூறியுள்ளார்.