பேஸ்புக்: 58 கோடி போலி கணக்குகள் முடக்கம்

பதிவு செய்த நாள் : 16 மே 2018 20:42

கலிபோர்னியா

   பேஸ்புக் நிறுவனம் 2018ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் 58 கோடி போலி முகநூல் கணக்குகளை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

சமூக வலைதளமான ‘பேஸ்புக்’கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், பேஸ்புக் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதில் பேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திடம் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, பேஸ்புக் வலைத்தளத்தில் வன்முறைகளைத் தூண்டும் பேச்சு, ஆபாச படங்கள் மற்றும் பயங்கரவாத கருத்துகளை வெளியிடும் முகநூல் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. மேலும், போலி முகநூல் கணக்குகள் முடக்கப்படும் எனவும் தெரிவித்தது.

இந்த சூழலில், ஜனவரி-மார்ச் இடையிலான 3 மாதங்களில் மட்டும் 58.3 கோடி போலி முகநூல் கணக்குகள் மூடப்பட்டதாக தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 3.4 மில்லியன் தவறான புகைப்படங்கள் நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.