மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம் விடுதலை

பதிவு செய்த நாள் : 16 மே 2018 19:16

கோலாலம்பூர்

ஊழல் மற்றும் ஓரினச் சேர்க்கை ஆகிய வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்துவந்த முன்னாள் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம். ஓரின சேர்க்கை மற்றும் ஊழல் வழக்குகள் காரணமாக இவருக்கு கடந்த 1998ஆம் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அன்வர் மறுத்தார். அவரது ஆதரவாளர்களும் எதிர்த்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த மலேசிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி அடைந்தது.

அன்வர் இப்ராகிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் பிஎச் கட்சி கூட்டணி வெற்றி பெற்றது.

எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதால் 92 வயதான மகாதீர் முகமது பிரதமர் ஆனார். இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போதே அன்வரை விடுவிப்பதாக மகதீர் மக்களிடம் வாக்களித்திருந்தார். பிரதமராக வெற்றிபெற்ற பின்னர் மகதீர், அன்வரின் மனைவியான வான் அசீசா வான் இஸ்மாயிலை துணை பிரதமராக தேர்வுசெய்தார்.

அதைத்தொடர்ந்து, அன்வர் இப்ராகிமை விடுதலை செய்ய வேண்டும் என மலேசிய மன்னரிடம் கோரிக்கையும் விடுத்திருந்தார். அதை ஏற்ற மன்னர் அன்வருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இந்நிலையில், அன்வர் இப்ராகிம் இன்று விடுதலை செய்யப்பட்டார். அன்வருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், விடுதலை செய்யப்பட்டதையடுத்து அங்கிருந்தே அரண்மனைக்கு புறப்பட்டுசென்றார்.

இதற்கிடையே தற்போதைய பிரதமர் மகதீர் 2 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அன்வர் இப்ராகிம் பிரதமராக பதவியேற்றுக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவுக்கு புதிய விடியல்

விடுதலையான அன்வர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். இதில் பேசிய அவர்,”மலேசியாவுக்கு தற்போது புதிய விடியல் கிடைத்துள்ளது. மத, இனம் ஆகியவற்றை கருதாமல், நாட்டு மக்கள் அனைவரும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்காக ஒன்று இணைந்து போராடினர். அதற்காக மலேசிய மக்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.