ரமலானை ஒட்டி காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்

பதிவு செய்த நாள் : 16 மே 2018 18:40

புதுடில்லி,

    ரமலான் மாதத்தை ஒட்டி ஜம்மு - காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பாதுகாப்பு படைகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ரமலான் மாதம் தொடங்குவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என மாநில முதல்வர் மெகபூபா முப்தி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஒரு மாதத்திற்கு ராணுவ நடவடிக்கைகள், தேடுதல் வேட்டை, தீவிர சோதனை போன்றவை எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படைகளுக்கு அறிவித்துள்ளது.

இதற்கிடையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடந்தால் தக்க பதிலடி கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவை வரவேற்று காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உமர் அப்துல்லா டுவிட்டரில்  நன்றி தெரிவித்துள்ளனர்.