காவிரி விவகாரம்: அமைப்பிற்கு வாரியம் என்ற பெயர்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்

பதிவு செய்த நாள் : 16 மே 2018 12:47

புதுடில்லி:

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்படும் அமைப்பிற்கு “வாரியம்” என்ற பெயரை வைக்க உச்சநீதிமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மே 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். விசாரணை தொடங்கியதும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி வரைவு செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது. அதன்படி செயல் திட்ட அறிக்கை நகல்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டன.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்யப்பட்டது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் அதில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், காவிரி வழக்கின் விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது தமிழகம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

வரைவு செயல் திட்டத்தில் குறிப்படப்பட்டுள்ள குழுவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. வரைவு செயல் திட்டக் குழுவின் தலைமையகம் பெங்களூரில் இருக்கக் கூடாது என்றும் தலைநகர் டில்லியில் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வாதிட்டது.

காவிரி அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிட தமிழகம் கோரிக்கை வைத்தது. இதற்கு கர்நாடக மாநிலம் ஒப்புதல் தெரிவித்தது. இதை தொடர்ந்து உச்சநீதிமன்றமும் வாரியம் என பெயரிட ஒப்புதல் அளித்தது

இதில், கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. கர்நாடக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் முடிவே இறுதியானது என்ற விதியை எதிர்த்து புதுச்சேரி அரசு வாதிட்டது. இதையடுத்து, குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்றும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரி குழுவிற்கான முடிவுகளை மத்திய அரசே எடுக்க முடியாது, குழு தனது முடிவுகளை செயல்படுத்த மத்திய அரசின் உதவியைக் கோரலாம். குழுவின் தலைமையகம் டில்லியில் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இந்த உத்தரவினை ஏற்று வரைவு செயல் திட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை நாளை (மே 17ஆம் தேதி) ஒத்திவைத்தனர்.