சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 344 – எஸ்.கணேஷ்

15 மே 2018, 03:31 PM

நடிகர்கள் :  ஷிவா, வைபவ், எஸ்.பி.பி. சரண், பிரேம்ஜி அமரன், பிரகாஷ்ராஜ், ஜெயராம், சம்பத்ராஜ், வேகா, காஜல் அகர்வால், நிகிதா மற்றும் பலர்.

இசை: யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு:சக்தி சரவணன், எடிட்டிங்: பிரவீண் கே.எல்., தயாரிப்பு: டி. சிவா, திரைக்கதை, இயக்கம்: வெங்கட் பிரபு.

சென்னையில் வாழும் அஜய்ராஜ் (ஷிவா), கணேஷ் (பிரேம்ஜி அமரன்), சகோதரர்கள் ஜெகபதி பாபு (எஸ்.பி.பி. சரண்), ராம் பாபு (வைபவ்) ஆகியோர் நெருங்கிய தோழர்கள். அஜய் தொலைக்காட்சி நடிகர், கணேஷ் இன்ஜினியரிங் மாணவன், ஜெகபதி பாபு திருமணமான இன்ஜினியர், ஆறு வயது மகளுக்கு தந்தை, ஜெகபதியின் தம்பி ராம் அவரோடு தங்கியிருக்கிறார். ராம், பூஜாவை (காஜல் அகர்வால்) விரும்புகிறார், அதை சொல்வதற்குள் பூஜா, அஜய்யை விரும்புவதாக கூறுகிறார். இருவருக்கும் திருமணம் நிச்சயமாகிறது. விழாவிற்கு தொலைக்காட்சி, சினிமா பிரபலங்கள் வந்து வாழ்த்த கோலாகலமாக நிச்சயதார்த்த விழா நடக்கிறது.

பெரும் பணக்காரரான விஸ்வநாதனின் (பிரகாஷ்ராஜ்) மகள் சரோஜா(வேகா) கடத்தப்படுகிறாள். விஸ்வநாதனின் நண்பன் ஏ.சி.பி. ரவிச்சந்திரன் கேஸை கவனிக்கிறார். கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக அஜய்யின் பழைய மாடல் காரில் நால்வரும் ஐதராபாத்துக்கு பயணமாகிறார்கள்.

தேசிய நெடுஞ்சாலையில் ரசாயண லாரி ஒன்று கவிழ்வதால் பெரிய டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. வேறு வழியில் ஐதராபாத்துக்கு செல்ல முயற்சிக்க, ஒரு கிராமவாசியின் தவறான வழிகாட்டுதலால் ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்றுவிடுகிறார்கள். அங்கு ஒரு கும்பல் ஒரு மனிதனை விரட்டி சுட்டுக்கொல்வதை பார்க்கிறார்கள்.

நடந்ததைப் பார்த்த இவர்களையும் அவர்கள் கொல்ல துரத்த, கணேஷும், ராம்பாபுவும் பக்கத்தில் உள்ள பேக்டரிக்கு உதவி கேட்டு செல்கிறார்கள். அங்கு நடக்கும் குழப்பத்தில் ஜெகபதியின் பர்ஸ் தொலைந்துவிடுகிறது.

தப்பித்து வருகையில் தனது பர்ஸால் தனது குடும்பம் மாட்டிக்கொள்ளும் என பயப்படும் ஜெகபதி, திரும்ப பேக்டரிக்கு செல்கிறான். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சரோஜாவை மீட்கிறான் கணேஷ். கடத்தல் கும்பல் தலைவன் சம்பத் தொடர்ந்து விஸ்வநாதனிடம் பெரும்தொகை கேட்டு மிரட்டுகிறான்.

பேக்டரியிலிருந்து தப்பிக்க இன்ஜினியரிங் மூளையை உபயோகிக்கும் நால்வர் அணி, வெற்றி கரமாக ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்கிறார்கள்.

அங்கு சம்பத், விஸ்வநாத்திடமிருந்து பணம் பெற ஆட்களுடன் காத்தி ருக்கிறான்.  

சம்பத்தை அடித்துப்போட்டு விட்டு நால்வரும் சரோஜாவை மீட்கிறார்கள். தண்டவாளத்திற்கு அந்தப் பக்கம் காத்திருக்கும் விஸ்வநாத்திடம் ஓடும் சரோஜாவை ஓட்டுனர் வேடத்தில் வரும் ரவிச்சந்திரன் மடக்கிப் பிடிக்கிறார். கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது ரவிச்சந்திரன் என உணர்ந்து கொள்கிறார் விஸ்வநாத். சண்டையின் இறுதியில் விஸ்வநாத் ரவிச்சந்திரனை சுட்டுக்கொல்ல, அனைவரும் வீடு திரும்புகிறார்கள். சரோஜா ராமை பார்த்தபடி செல்ல, நண்பர்கள் அனைவரும் காப்பாற்றிய பெண்ணின் பெயரை யோசித்தபடி செல்கிறார்கள்.