ஐ.நா சபைக்கு நீந்தலாம்..

பதிவு செய்த நாள் : 05 மே 2018

இந்தியாவில் பல விளையாட்டுகள் விளையாடப்பட்டு வந்தாலும், அதில் சில விளையாட்டுகளுக்கு மட்டுமே மவுசு அதிகமாக உள்ளது. இதில் முதல் இடத்தை பிடித்திருப்பது கிரிக்கெட்தான். பொழுதுபோக்கிற்காக விளையாடப்படும் அந்த விளையாட்டிற்கு ரசிகர்களும் ஏராளம். இவற்றை பற்றி நாம் முன்னரே பலமுறை ஆய்வு செய்திருக்கின்றோம்.

இந்த கட்டுரையில் பொழுதுபோக்கிற்கான விளையாட்டு குறித்து இல்லாமல், நலம் பயக்கும் விளையாட்டு குறித்தும், அந்த விளையாட்டில் தலைசிறந்து விளங்கிய தமிழக வீரர் குறித்தும் நாம் பார்க்கப்போகின்றோம். விளையாட்டு என்றாலே, அது பொழுதுபோக்கிற்கு தானே, நலம் பயக்கவேண்டும் என்று யாராவது விளையாடுவார்களா? அப்படி நலம் பயக்கக்கூடிய விளையாட்டு எது? என்று பலரும் பல கேள்விகளை கேட்பீர்கள்.

நீச்சல்

அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில், நீச்சல். நீச்சல் என்பது நீரில் இருக்கும் மனிதன் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எந்தவொரு உபகரணமுமின்றி தன் கை கால்களை மட்டும் பயன்படுத்தி செல்வது ஆகும். இதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு பல விளையாட்டுகள் காலப்போக்கில் வந்துள்ளன.

உலகில் பெரும்பாலானோருக்கு நீச்சலடிக்க தெரிவதில்லை என்பது நிதர்சனமான உண்மை. நகரங்களில் வாழும் மக்கள் நீச்சல் பயிற்சிகள் எதுவும் இல்லாமல், வாழ்ந்து வருக்கிறார்கள்.

நீச்சல் என்பது நீரில் நீந்த மட்டும்தான் என்ற மனநிலை பலரிடம் உள்ளது. அனைவருக்கும் நீச்சல் அத்தியாவசியமான ஒன்று. உடல்நலத்தை பேணிக்காப்பதில் அது முக்கிய பங்கு வகிப்பதை யாரும் உணரவில்லை. மார்ஷியல் ஆர்ட்ஸ் என்னும் தற்காப்புக் கலையை கற்றவர்கள் எப்படி தன்னம்பிக்கையுடன் திகழ்வார்களோ அதேபோல, நீச்சல் அறிந்தவர்களும் தன்னம்பிக்கை பெற்று திகழ்வார்கள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு மனிதன் தினமும் சோர்வடையாமல் இருக்க, உடற்பயிற்சிகள் செய்யவேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையான உடற்பயிற்சிகளினால் நமக்கு எவ்வளவு சுறுசுறுப்பு கூடுகிறதோ, அவற்றை வழங்கும் திறனை நீச்சலும் பெற்றுள்ளது. ஏன், அதைவிட அதிகமான பலனையும் நீச்சல் நமக்கு வழங்குகின்றது என்று கூறினாலும் அது தவறில்லை.

1800 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் நீச்சல் கலையை, விளையாட்டாக விளையாடத் தொடங்கினார்கள். 1896ஆம் ஆண்டில் கிரேக்கத்தில் நடந்த முதலாம் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் போட்டிகளும் சேர்க்கப்பட்டது. 1908ஆம் ஆண்டில் பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு (International Swimming Federation) தொடங்கப்பட்டது. நீச்சல் போட்டிகளை உலகளவில் பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்புதான் கட்டுப்படுத்தி வருகின்றது. இந்த கூட்டமைப்பை சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகரித்துள்ளது.

நீச்சல் வீரர்

உலக அளவில் நீச்சலில் சிறந்து விளங்கும் வீர வீராங்கனைகள் பலர் உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை நீச்சலில் தலைசிறந்து விளங்கியவர்கள் பலர் இருந்தாலும், சிலரின் பெயரே நம் நினைவுக்கு வரும். அதில் முதலில் நமக்கு நினைவில் வருவது அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் தான். தமிழகத்தை சேர்ந்த இவர் நீச்சல் போட்டிகளில் செய்த சாதனைகள் எண்ணற்றது.

அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் நீச்சலில் வந்தது எப்படி?

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆர்.என்.ஜெயபிரகாஷ் மற்றும் பவானி ஜெயபிரகாஷ் ஆகியோருக்கு அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் பிறந்தார். அவர் பிறக்கும் சமயத்தில் அவரது நுரையீரல் 20 சதவீதம் மட்டுமே செயல்பட்டது. இதனை சரிபடுத்த நீச்சல் உபயோகமாக இருக்கும் என்று எண்ணிய அவரது பெற்றோர்கள் அக்னிஷ்வர் ஜெயபிராஷ்-ஐ நீச்சல் பயிற்சியில் சேர்த்தனர். அவர் நீச்சல் பயிற்சியில் சேர்க்கப்பட்டது எந்த வயதில் தெரியுமா? 3 வயதிலேயே சேர்க்கப்பட்டார்.

சிறுவயது முதலே நீச்சல் பயிற்சிகளில் ஈடுபட்ட அக்னிஷ்வருக்கு இருந்த நுரையீரல் பிரச்சனை முற்றிலும் சரியானது. அப்படிபட்ட பெரும் மகத்துவத்தை நீச்சல் பெற்றுள்ளது. இதனை யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

தனக்கு இருந்த பிரச்சினை குணமடைந்ததும், அக்னிஷ்வர் நீச்சலை கைவிட்டுவிடவில்லை. நீச்சலில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. இதனால், கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டார். தோல்விகளைக் கண்டு துவண்டுபோகாமல் தொடர்ந்து முயற்சிசெய்தார். இதன்மூலம் அவர் எண்ணற்ற கோப்பைகளையும், பதக்கங்களையும் வென்றார்.

பள்ளிப் படிப்பில் கெட்டிக்காரராக திகழ்ந்த அக்னிஷ்வருக்கு மெரிட்-இல் மருத்துவம் படிக்க சீட் கிடைத்தது. ஆனால், அந்த படிப்பை தேர்வுசெய்து படித்தால், நீச்சலில் தன் திறமயை வெளிபடுத்த முடியாமல் போய்விடும் என்று நினைத்து, அந்த வாய்ப்பினை நிராகரித்தார். இவரின் இந்த முடிவுக்கு அவரது பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு நல்கினர்.

இந்த காலத்தில் மருத்துவ படிப்பினை படிக்கவேண்டும் என்றால், பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அப்படி கிடைக்கும் வாய்ப்பினை நழுவவிடவேமாட்டார்கள். ஆனால், அக்னிஷ்வர் ஜெயபிரகாஷோ தன் இலக்கை அடையவேண்டும் என்ற ஒரே நோக்கத்தினால் அதனை வேண்டாம் என்று ஒதுக்கினார். மருத்துவம் படித்தால், தனக்குப் பிடித்த நீச்சலில் எதுவும் சாதிக்க முடியாமல் போய்விடும் என்ற ஒரே எண்ணம் அவர் மனதில் ஓடியது. பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டத்தை பெற்ற இவர், அமெரிக்காவில் உள்ள குவீன்ஸ் யூனிவர்ஸிட்டியில் எம்பிஏ பட்டத்தையும் பெற்றார்.

பல நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்ட அக்னிஷ்வர், நூற்றுக்கணக்கான பதக்கங்கள், கோப்பைகள் என குவித்துவைத்துள்ளார். சர்வதேச அளவிலான போட்டிகளில் இதுவரை 11 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற அக்னிஷ்வர், 23 தங்கம், 14 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார். இதேபோல், மாநில அளவிலான போட்டிகளில் 132 தங்கம், 35 வெள்ளி, 15 வெண்கலப் பதக்கங்களையும் தன் பட்டியலில் சேர்த்துள்ளார்.

இதுவரை 14 முறை சாம்பியன் பட்டங்களை பெற்றுள்ளார். மேலும் 9 தேசிய அளவிலான சாதனைகளை படைத்துள்ளார். இந்த 6 சாதனைகளையும் தன் இளம் வயதிலேயே படைத்த முதல் நீச்சல் வீரர் அக்னிஷ்வர் ஆவார். தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டுமுதல் தோற்கடிக்கப்படமுடியாத வீரராக இவர் திகழ்ந்துவருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது தமிழக முதலமைச்சரால் அக்னிஷ்வருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நற்குணங்கள் வளர்க்கும் நீச்சல்

அக்னிஷ்வர் ஒருமுறை அளித்த பேட்டியில், தான் சுய ஒழுக்கமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நீச்சல். ஒரு போர் வீரரின் மனநிலை தனக்கு எப்பொழுதும் உள்ளதாகவும், இலக்குகள் மீது கவனம் செலுத்துவது எப்படி என்றும் நீச்சல் தனக்கு கற்றுக்கொடுள்ளது என்றும் கூறியுள்ளார். நீச்சல் அவர் வாழ்க்கையை வேறு ஒரு பரிமாணத்திற்கு கொண்டுசென்றுள்ளது. நீச்சலை யார் பயின்றாலும் அவர்கள் தங்கள் வாழ்வில் நற்பண்புகளுடன் முன்னேறிச்செல்வார்கள் என்பது உறுதி.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாம் அவர்களை தனது ஆசானாக ஏற்றுக்கொண்ட அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ், அவரது கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணினார். அந்த நோக்கத்தில் இக்னைட் இந்தியா (IGNITE INDIA) என்ற அமைப்பை அக்னிஷ்வர் தொடங்கினார். 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளின் கண்டுபிடிப்புகளை வெளிகொண்டுவந்து ஊக்கப்படுத்தவே தொடங்கப்பட்டது.

ஐநாவுக்கு நீந்திய வீரர்

நாட்டின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவித்து வரும் நீச்சல் வீரர் அக்னீஷ்வரை ஐக்கிய நாடுகள் சபையும் அங்கீகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு இளைஞர்களுக்கான குளிர்கால ஐநா சபை மாநாடு நடைபெற்றது. அந்த 19 ஆவது மாநாட்டில், 85 நாடுகளை சேர்ந்த 700 இளைஞர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அந்த மாநாட்டில், வறுமை, கல்வி உள்ளிட்ட பல துறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு அந்த மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் தலைச்சிறந்த 3 தூதர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அதில் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷும் ஒருவர் என்பது இந்தியாவிற்கு பெருமைக்குரிய விஷயமாகும். ஏனெனில், சிறந்த இளைஞர் தூதராக இந்தியர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டது அதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி நீச்சல் என்னும் விளையாட்டு மூலம் உலகிற்கு தெரியவந்த அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் ஐக்கிய நாடுகள் சபை வரை பிரபலமாகியுள்ளார். இதற்கு முதற்படியாக நீச்சலே அமைந்துள்ளது என்று அக்னிஷ்வரே பலமுறை தெரிவித்துள்ளார்.

நீச்சலால் நம் வாழ்வில் எதுவும் சாதிக்கமுடியாது. அது தேவையில்லாத ஒன்று என்று எண்ணும் மக்கள், அவற்றால் கிடைக்கும் பலன்களை பற்றி தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம். நகரங்களில் வாழும் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை கோடைக்காலத்தில் மட்டும் நீச்சல் பயிற்சிக் கூடங்களில் சேர்த்துவிடுகின்றனர். அவ்வாறு செய்யாமல், தினமும் நீச்சல் பயிற்சிகள் செய்துவந்தால், உடலில் உள்ள அனைத்து உபாதைகளும் சீரடையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு துறையில் சாதிக்கவேண்டும் என்றால் அதற்கு கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, தூய்மை, உண்மை என பல நற்குணங்கள் நமக்கு தேவை. அந்த அனைத்து பண்புகளையும் தரும் ஒரே விளையாட்டு நீச்சல் என்று பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அக்னிஷ்வரும் திகழ்ந்துவருகிறார்.

இப்படி நீச்சல் மூலம் தன் வாழ்க்கையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்ற அக்னிஷ்வரை போல பல்வேறு நீச்சல் வீரர்களும் பல சாதனைகளை படைத்தவண்ணம் உள்ளனர். அவர்கள் வாழ்க்கையில் சிறந்த மனிதர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கட்டுரையாளர்: தினேஷ் குகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
Pratheep 06-05-2018 08:51 AM
நல்ல கட்டுரை...

Reply Cancel


Your comment will be posted after the moderation


Karthick 06-05-2018 02:27 PM
Excellent Writing Dinesh Guhan Bro, Its A Great Inspiration For Each And Everyone

Reply Cancel


Your comment will be posted after the moderation