கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 125

பதிவு செய்த நாள் : 30 ஏப்ரல் 2018

‘தெய்வ மகன்’ பெற்ற ஆஸ்கார் வெற்றி!

சிவாஜி கணேசன்  மூன்று வேடங்களில் நடித்த ‘தெய்வ மகன்’ படம் (1969), ஆஸ்கார் விருதுக்காக ஹாலிவுட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிறந்த வேற்றுமொழிப்படத்திற்கான விருதை, அமெரிக்க  பிலிம் அகாடமி, 1956ல் முதன்முதலாக அமைத்தது. அதன் பின்பு, இந்திய பிலிம் பெடரேஷன் இந்திய படங்களிலிருந்து தேர்வு செய்து, விருதுக்காக படங்களை அனுப்பி வந்தது. ‘மதர் இந்தியா’ (இந்தி -–  1957), ‘மதுமதி’ (இந்தி -1958), ‘ஆபூர் சன்ஸூர்’ (வங்காளம் –- 1959), என்று தொடங்கி, 1968 வரை பல்வேறு இந்தி மற்றும் வங்காளப்படங்களை ஆண்டுக்கு ஒன்றாக இந்திய பிலிம் பெடரேஷன் அனுப்பியது.  முதல் முறையாக, 1969ம் ஆண்டு, ‘தெய்வ மகன்’ படத்தை ஆஸ்காருக்கு அது அனுப்பியது. பரிசு கிடைக்காதது மட்டும் அல்ல,  அதற்கு முதல்கட்டமான முன்மொழியப்படும் ‘நாமிநேஷன்’ நிலையைக்கூட ‘தெய்வ மகன்’   அடையவில்லை. அதுவரை அனுப்பப்பட்ட  இந்திய படங்களில் ‘மதர் இந்தியா’வைத் தவிர வெறெந்தப் படமும் கூட அந்தக் கட்டத்திற்கு வரவில்லை.

‘தெய்வ மகன்’ படத்திற்கு ஆஸ்கார் விருது விஷயத்தில் ஏற்பட்ட கதியைக் குறித்து, படத்தின் இயக்குநரான ஏ.சி. திருலோகசந்தர், பின்னாளில் இப்படி கூறினார்: ‘‘ ‘தெய்வ மகன்’ படம் ஆஸ்கார் அவார்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆங்கில வசனக்கோர்வையோடு அமெரிக்காவுக்கு சென்றது. ஒலிம்பிக்கில் ஜெயிப்பதற்கு ஒரு கூட்டுமுயற்சியின் தூண்டுதல் அவசியம். இது தாயில்லாப் பிள்ளையாக அங்கு போய் நின்றது, போற்றுதலோடு திரும்பி வந்தது,’’(நெஞ்சம் நிறைந்த நினைவுகள்). எந்தவிதமான போற்றுதல், யாரிடமிருந்து அது பெறப்பட்டது என்பதை யெல்லாம்  திருலோகசந்தர்  குறிப்பிடவில்லை. ஆனால் புறக்கணிக்கப்படும் ஒரு குழந்தையின் கதையை மையமாகக்கொண்ட ‘தெய்வ மகன்’, தானே புறக்கணிப்பிற்கு ஆளானது வினோதம்தான்! ‘தெய்வ மகன்’ பட டைட்டில்களிலேயே அதற்கான மூலக்கதைப் பற்றிய குறிப்பு உள்ளது. கதை, நிஹார் குப்தா என்று அது தரப்பட்டுள்ளது. சரியாக சொல்லவேண்டும் என்றால், மூலக்கதையினுடைய ஆசிரியரின் பெயர், டாக்டர். நிஹார் ரஞ்சன் குப்தா (1911-–1986). அவருடைய பின்கதையும் சுவாரஸ்யமானது. தன்னுடைய தமக்கை தேள்கடியால் உயிர் துறந்ததைப் பார்த்த நிஹார் ரஞ்சன், மருத்துவத்தில் உயர் படிப்பு படித்து, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். இரண்டாம் உலகப்போரின் போது, ராணுவ மருத்துவராக பர்மா, சிட்டகாங், எகிப்து முதலிய இடங்களில் பணியாற்றினார். அதன் பிறகு இங்கிலாந்து சென்று தோல் மருத்துவ நிபுணரானார்.

பதினெட்டு வயதில் முதல் நாவலை எழுதிய நிஹார் ரஞ்சன், 200 நாவல்களுக்கு மேல் எழுதினார். அவற்றில் 45 படைப்புகள், வங்காளம் மற்றும் இந்தி மொழிப்படங்களாக எடுக்கப்பட்டன.

நிஹார் ரஞ்சனின் ‘உத்தர்பால்குனி’தான் இந்தியில் ‘மமதா’வாகி, தமிழில் ‘காவியத்தலைவி’ (1970) ஆனது. இந்த வங்க எழுத்தாளரின் கதையை வைத்துக்கொண்டுதான், நம்முடைய ஸ்ரீதர், ‘நயி ரோஷிணி’ (‘புதிய வெளிச்சம்’ 1967) என்ற இந்திப் படத்தை இயக்கினார். அதே  படம்தான், பிறகு, ‘பூவும் பொட்டும்’ (1968) என்று தமிழில் வந்தது.

நிஹார் ரஞ்சனின் பிரபல நாவலான ‘உல்கா’,  வங்காள படமாக வந்தபின், இந்தியிலும் வெளிவந்தது. இந்தியில் ‘உல்கா’ கதை, ‘மேரே சூரத் தேரி ஆங்கேன்’ (என்னுடைய முகம், உன்னுடைய விழிகள்) என்ற தலைப்பில் வந்தது (1963).  ஈஷ்வர்லால் என்ற கனவானின் மனைவி கமலா. அவர்களுக்கு முதல் குழந்தைப் பிறக்கிறது. அது கன்னங்கறேல் என்று அட்டைக்கரியாக இருக்கிறது. கறுப்பு நிறம் என்றால் வெறுக்கும் ஈஷ்வர்லால், குழந்தையை ஏற்க மறுக்கிறார். மருத்துவமனையை நடத்தும் தன்னுடைய நண்பர் டாக்டர் மாதுரிடம் குழந்தையை அப்புறப்படுத்திவிடும்படி கூறுகிறார்!

தன்னுடைய நண்பரின் மனோபாவத்தைக் கண்டு அதிர்ச்சி அடையும் டாக்டர், குழந்தைப்பேறு இல்லாத ஒரு முஸ்லிம்  தம்பதியிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்துவிடுகிறார். குழந்தை இறந்து பிறந்தது என்று தன்னுடைய மனைவியிடம் கூறிவிடுகிறார் ஈஷ்வர்லால்.

இரண்டாவது முறையாக கர்ப்பமாகும் கமலா, ஈஷ்வர்லாலின் எதிர்பார்ப்பின் படி, ஒரு அழகான மகனைப் பெறுகிறாள். அவர்களுடைய மகன் வளர்ந்தபின், ஓட்டல் நடத்தும் தொழிலில் ஈடுபட்டு, கெட்ட சகவாசத்தின் காரணமாக, பெண்கள் விஷயத்தில் விளையாட்டுப்பிள்ளையாக இருக்கிறான்.

ரக்மத் பாய் என்ற முஸ்லிமிடம் வளரும் முதல் மகன் ‘பியாரே’, தன்னுடைய மிகக்கரிய வடிவத்திற்காகப் பலரால் புறக்கணிக்கப்பட்டாலும், வளர்ப்புத்தந்தையிடம் இசை  கற்று,  நல்ல பாடகனாக இருக்கிறான். தான் வளர்ப்புத்தந்தைதான் என்று இறக்கும் தறுவாயில் கூறும் ரஹ்மத், டாக்டர் மாதுரின் முகவரியை தருகிறார்.

பியாரேவை தன்னுடைய வீட்டிலேயே டாக்டர். மாதுர்   தங்க வைக்கிறார். கலையுள்ளம் கொண்ட நடனமணியான டாக்டரின் மகள் கவிதா, பியாரேயினுடைய இசையின்பால் ஈர்க்கப்படுகிறாள். பியாரேயின் வடிவத்தைக் கண்டு அவள் அவனை வெறுக்கவில்லை... மாறாக, அவனுடைய பாட்டுக்கு மேடையில் நடனமாடி அவனை கவுரவிக்கிறாள்.

இந்த நிகழ்ச்சியைக் காணும் பார்வையாளர்களில் பியாரேயின் தந்தையும் இருக்கிறார்.  எல்லோரும் அவனுடைய இசைக்காகப் பியாரேவைப் பாராட்டி கைத்தட்டி வரவேற்கிறார்கள்.

டாக்டர். மாதுர் மேடை ஏறி, ‘இந்த அரிய கலைஞன் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் என்னுடைய மருத்துவமனையில்தான் பிறந்தார்’ என்று பெருமையுடன் கூறுகிறார்.

பியாரே என்ற பெருங்கலைஞன் தன்னுடைய மகன்தான் என்பதை ஈஷ்வர்லால் உணர்கிறார். தன்னுடைய கடந்தகால நடத்தைக்காக வெட்கப்பட்டு, பியாரேவுக்காக பெருந்தொகை கொடுக்க முன்வருகிறார். ஆனால், பியாரேவுக்குத் தேவை அன்பின் அங்கீகாரம்...அரவணைப்பு...ரூபாய் நோட்டுக்களின் கதகதப்பல்ல. பியாரே நாடுவது, கவிதாவின் உள்ளத்தை...ஆனால் பியாரே  மீது அவனுடைய கலைக்காக மரியாதையிருந்தாலும், பியாரேவின் தம்பியைத்தான் கவிதா காதலிக்கிறாள்! கடைசியில், தன்னுடைய உயிரையே தியாகம் செய்து தம்பியைக் கயவர்களின் வஞ்சகத்திலிருந்து மீட்கிறான் பியாரே. இந்த வகையில் செல்கிறது வங்காளக் கதை ‘உல்கா’வை தழுவிய இந்திப் படம். இதே கதையை, ‘தாயின் கருணை’ என்ற பெயரில், தமிழில் இயக்கினார், கன்னட சினிமாவில் புகழ்பெற்றிருந்த ஜி.வி. அய்யர்! ஆனால் கரிய வடிவம் என்பதை மாற்றி, முகத்தின் இடப்பக்கத்தில் கரிய மரு என்று காட்டினார்! இந்தியில் அசோக்குமார் நடித்த வேடத்தில், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்களிடம் புகழ்பெற்றிருந்த கன்னட நடிகரான கல்யாண் குமார் நடித்தார். முகத்தின் களங்கம் பார்க்கின்றவர்களுக்குத் தெரியாத வண்ணம், பிளாஸ்டர் ஒட்டப்பட்டு காட்சி அளித்தார் கல்யாண்குமார்! இதற்கான பிரத்யேக மேக் – அப் போட செலவாகும் என்று எண்ணி, இந்த உத்தியை இயக்குநர் கையாண்டிருக்கலாம்!

 இசை இரட்டையர்கள் விஸ்வநாதன் – ராமுமூர்த்திக்கு தமிழ் படங்களில் உதவியாளராக இருந்த ஜி.கே. வெங்கடேஷ், கன்னட திரை உலகில் புகழ்பெற்றுக்கொண்டிருந்த சமயம் அது. அவருடைய இசையமைப்பில், ‘தாயின் கருணை’க்கு சில நல்ல பாடல்கள் கிடைத்தன.  ‘பூந்தென்றல் இசை பாட’ என்று பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடிய மிக இனிமையான பாடல், இன்று வரை இசை ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது.

‘உல்கா’வின் கரிய நிறத்தை ஒரு பக்கக் கரிய மருவாக மாற்றிய ‘தாயின் கருணை’, படத்தின் முடிவையும் மாற்றியது. அவலட்சணத்துடன் பிறந்தவனுக்கு வாழ்க்கையே இல்லை என்று கூறுவதுபோல் நாயகனை சாகடிக்காமல், கடைசியில் அறுவை சிகிச்சையின் வாயிலாக அவனுடைய வடிவம் சரிசெய்யப்படுவதாகக் காட்டியது ‘தாயின் கருணை’. ஆனால், கதையின் முடிவை மாற்றியதால், ‘தாயின் கருணை’யின் முடிவு மாறவில்லை. இந்திப் படத்தைப் போல, அதுவும் தோல்வியைத்தான் தழுவியது! இந்த நிலையில்தான், இந்தக் கதை, இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரின் கவனத்தைக் கவர்ந்தது.

நாவல் என்ற முறையிலே ‘உல்கா’ புகழ்பெற்றிருந்தாலும் 1957ல் வந்த வங்காளப்படம் கூட பெரிய வெற்றி அடைந்ததாகத் தோன்றவில்லை. அப்படி அடைந்திருந்தால், இன்றைக்கு அதன் பிரதி கிடைத்திருக்கலாம். நல்ல இசை அமைந்தாலும், இந்தி படமும் தமிழ் படமும் மண்ணைத்தான் கவ்வியிருந்தன. இப்படி இருக்கும் போது, ‘உல்கா’ கதை, ஹல்கா

(= தக்கையானது) என்பது போல் ஆகியிருந்தாலும், அதை உச்சி மேல் மோந்து ‘தெய்வ மகன்’ படத்தில் திருலோகசந்தர் இறக்கியது ஏன்? ஒரு  உணர்ச்சியின் வேகத்தில், ‘தெய்வ மகன்’ திரைக்கதையை எழுதியதாகக் கூறுயிருக்கிறார் அவர்.

‘‘ஏதோ ஒரு ஆவேசத்தில் திரைக்கதை, எல்லா சீன்களையும் எழுதி முடித்தேன். எனக்குத் திருப்தி இருந்தது. என் கற்பனையில் காட்சிகள் தெளிவாக அமர்ந்துவிட்டன’’.

அவர் வேறொன்றும் கூறவில்லை என்றாலும், அவருடைய சிந்தனையை நாம் இவ்வாறு யூகிக்கலாம். வெறும் வெற்றிலையை சாப்பிட்டால், நாக்குத் தடிக்கும். பாக்கை மட்டும்  போட்டு மெல்லுவது நல்ல பழக்கம் இல்லை. சுண்ணாம்பை மட்டும் வாயில்போட்டால் என்னவாகும் என்று சொல்லவேண்டியது இல்லை. ஆனால் மூன்றையும் சேர்த்து சாப்பிட்டால்? உடலுக்கு ஆரோக்கியம்!  இந்த வகையில், திருலோகசந்தரின் தொடுப்பில், குழந்தை அவலட்சணமாக பிறந்திருக்கிறது என்று அதைப் புறக்கணிக்கும் தந்தையும் சிவாஜிதான், பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டோம் என்ற தாங்கமுடியாத ஆதங்கத்தில் அல்லல்படும் மகனும் சிவாஜிதான், அழகான பெண்களுடன் ஆடிப்பாடிக்கொண்டாடும் கதாநாயக வடிவம் கொண்ட அழகு மகனும் சிவாஜிதான்!  தொட்டிலில் ஆடும் குழந்தையை மட்டும் திருலோகசந்தர் காட்டவில்லை...ஏனென்றால், அப்படிக்காட்டியிருந்தால், ‘‘அந்தக் குழந்தையே நீங்கதான் சார்’’ என்று சிவாஜிக்கு, திருலோக் கதை கூறியிருப்பார் என்பதையும், ‘‘இந்தக் கதையில் பல பிளஸ் இருக்கிறது’’ என்று சிவாஜி ஆமோதிப்பதற்கான சந்தர்ப்பத்தையும் மனக்கண்ணில் காணக்கூடியவர்கள் ஒரு சிலர் இருப்பார்கள்.

அன்றைய ரசிகர்கள் அப்படி...சிவாஜியின் ஒவ்வொரு ஜாடையிலும் ரசனையைக் காணக்கூடியவர்கள். அவற்றை வெளியே கொண்டுவந்து, ‘தெய்வ மகனை’க் கொண்டு வெற்றிக்கனியைப் பறித்து, அதிலிருந்து ரூபாய் நோட்டுக்களை ஜூஸூகப் பிழிந்தெடுக்கக் கங்கணம் கட்டிக்கொண்டார் திருலோக். ‘தெய்வ மகன்’ படத்தின் தயாரிப்பாளர் யார் என்று நினைத்தீர்கள்..சிவாஜியின் நெருங்கிய பால்யகால நண்பர் பெரியண்ணன். அவருடைய தோட்டத்தில் பணமழைப் பொத்துக்கொண்டு பெய்ய வேண்டாம்? ‘உல்கா’ கதையின்படி, அவலட்சணமான மகனை நிராகரிக்கும் தந்தை,  பொய்யான கவுரவம் பார்ப்பவர், உயர்ந்த குணம் இல்லாதவர். அந்த வேடத்தில் சிவாஜியை எப்படி போடுவது?

ஒரு தந்தை, தனக்குப் பிறக்கும் மகனை அவலட்சணம் என்று காரணம் காட்டிக் கொல்லவே சொல்கிறான் என்றால், அதற்கு ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும்...அதை வலுவாகக் காட்ட வேண்டும் என்று நினைத்தார் திருலோக்.

அந்தத் தந்தையே, முகத்தில் ஒரு பக்கத்தில் அவலட்சணமான தழும்பு உள்ளவர்...அப்படி இருந்தும், தன்னுடைய முகத்தைப் பார்த்து அவமதித்த சமுதாயத்தில் கஷ்டப்பட்டு அவர் பணக்காரனாக உயர்ந்திருந்தார்...பணபலம்கொண்டு நிழல்மனிதராக வாழ்ந்து கொண்டிருந்தார்...அந்தக் காரணத்தால்தான் அவர் அருவருப்பான மகனை ஏற்றக்கொள்ள மறுத்தார் என்று ஒரு புது குணச்சித்திரத்தை வகுத்தார் திருலோக்... இதைக்கொண்டு, பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற அந்தப் பாத்திரத்தின்  எண்ணத்திற்கு, ஓரளவு நியாயம் கற்பித்தார்.

இப்படி மூன்று சிவாஜிகளை, அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வண்ணம் காட்டினார் திருலோகசந்தர். சோகம், வீரம், பாசம், சிருங்காரம் ஆகிய அஸ்திரங்களை சிவாஜியின் நாடகபாணி நடிப்பை கொண்டு ரசிகர்கள் மீது வெற்றிகரமாகக் தொடுத்தார். இந்த எத்தனத்தில் அவரே சில அவலட்சணங்களில் ஈடுபட்டார். ‘‘ஏன் எனது பெற்றோர் என்னை நிராகரித்தார்கள்?’’ என்ற கேள்வியுடன், டாக்டரை அவலட்சண சிவாஜி அச்சுறுத்தும் போது, சிவாஜியை கண்ணாடிக்கு முன் இழுத்துச் சென்று, ‘உன் முகத்தைப் பார்...இந்த அவலட்சணத்தின் காரணமாகத்தான் உன் தந்தை உன்னைப் புறக்கணித்தார்,’’ என்கிறார் டாக்டர் (மேஜர் சுந்தரராஜன்).  

‘உல்கா’ நாவலிலும் படத்திலும் இந்தி திரைப்படத்திலும் தாயின் கருணையிலும் வருகிற டாக்டர், கனவான், பண்பாளர். ‘தெய்வ மகன்’ படத்திலும் பெரும்பாலும் அவர் அப்படித்தான். கதாசிரியரன நிஹார் ரஞ்சன் குப்தாவும் ஒரு டாக்டர்தான். தன்னுடைய வார்ப்பிலேகூட, ‘உல்கா’வில் வரும் டாக்டரின் பாத்திரத்தை அவர் வார்த்திருக்கக்கூடும்! அப்படி இருக்கும் போது, ‘தெய்வ மக’னின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் அந்த டாக்டரே மிகவும் பண்பற்ற முறையிலே நடந்துகொள்வதைப் பார்த்திருந்தால் அவர் அதிர்ச்சியுற்றிருப்பார்!  ஆனால் காட்சி நன்றாக வரவேண்டும் என்றுதான் அதை திருலோக் செய்தார். அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். ரசிகர்கள் சிவாஜியின் நடிப்பை கண்டு பிரமித்தார்கள், சில்லறை கொட்டியது. ஆஸ்கார் பயணம் புஸ்வாணமானால் என்ன? பின்னாளில், ரயில் பிளாட்பாரத்தில் நிகழ்த்தப்படும் ஒரு வெற்றுப்பாட்டுக்கு அது கிடைத்துவிட்டுப் போகிறது!  இரண்டாயிரமாம் ஆண்டுவாக்கில் நான் பங்கெடுத்த ஆஸ்காரைப் பற்றிய விவாதத்தில், சிவாஜி ரசிகர் ‘தெய்வ மக’னுக்கு ஆஸ்கார் கொடுக்காததைப்பற்றி இன்னும் உச்சுக் கொட்டிக்கொண்டிருந்தார்.வெற்றி என்றால் அதுதான்!

(தொடரும்)