கலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 9

பதிவு செய்த நாள் : 29 ஏப்ரல் 2018
வி.ஏ.செல்லப்பா, சரஸ்வதி
தன அமராவதி’ படத்தில்  சந்திரபாபு
வி.என்.சுந்தரம்

நட்சத்திர அணிவகுப்பு  சந்திரபாபுவின் முதல் பாட்டு!

மாடர்ன் தியேட்டர்ஸில் பணியாற்றும் போதே, வெளித் தயாரிப்பாளர்களின் படவாய்ப்புகளும் மகாதேவனுக்கு வரத் தொடங்கின. அப்படி வந்த படம்தான், ‘பக்த ஹனுமான்’ (1944).

அது மிகப்பழைய தயாரிப்பாளரும் இயக்குநருமான சி.வி. ராமனின் படம். தமிழ்நாட்டின் முதல் பேசும் பட ஸ்டூடியோவான ‘சவுண்ட் சிட்டி’யை 1934ல் சென்னையிலே தொடங்கிய ஏ. நாராயணனின்  சகோதரரான சி.வி. ராமன் பி.ஏ. எல்.எல்.பி, மவுனப் படக் காலத்திலிருந்தே திரைப்படங்களை எடுத்து வந்தவர். ஆனால், பல காலமாக அதிர்ஷ்ட காற்று அடிக்காதவருக்கு, மகாதேவன் இசையமைத்த ‘பக்த ஹனுமான்’ வெற்றிப் படமாக அமைந்தது.

‘பக்த ஹனுமா’னுக்கு இசையமைக்கும் வாய்ப்பு  மகாதேவனுக்கு கிடைத்ததற்கு, மாடர்ன் தியேட்டர்ஸ்தான் காரணம். தயாரிப்பாளர் சி.வி.ராமன், தன்னுடைய ‘ஆனந்த ஆஸ்ரமம்’ (1942) என்ற படத்தை, மாடர்ன் தியேட்டர்ஸூடன் கூட்டுத் தயாரிப்பில்தான் எடுத்திருந்தார். தயாரிப்பு வசதிகளுக்காக அவர் மீண்டும் மாடர்ன் தியேட்டர்ஸூக்கு வந்த போது, மகாதேவனின் தொடர்பு ஏற்பட்டது.

‘பக்த ஹனுமான்’ படத்தில், பழம்பெரும் நாடக, சினிமா நடிகரான வி.ஏ. செல்லப்பா, அனுமனாக நடித்தார். அன்றைய ‘சினிமா ராணி’யான டி.பி.ராஜலட்சுமியுடன், ‘மதுரை வீரன்’ (1938) என்ற வெற்றிப்படம் உட்பட, பல படங்களில் ஜோடியாக நடித்தவர் செல்லப்பா. அவர் நாடகச் சக்கரவர்த்தி எஸ்.ஜி. கிட்டப்பாவின் மருமகன். நல்ல குரல் வளம் உள்ள பாடகர். இன்னொரு வெற்றிப்படமான ‘தட்ச யக்ஞ’த்தில், செல்லப்பா பாடிய ‘தனியாய் எனை விடுத்தாய்’ என்ற விருத்தத்தைத்தான் சின்ன வயதில் டி.எம். சவுந்தரராஜன் பாடிக்கொண்டிருப்பார். தனக்கொரு முன்னோடிப் பாடகராக டி.எம்.எஸ்.  கருதிய செல்லப்பாவிற்கு கணீர் என்ற குரலும் பாங்கான இசைப்பாணியும் அமைந்திருந்தன.  

மற்றபடியும், ‘பக்த ஹனுமான்’ ஒரு நட்சத்திரப்பட்டாளத்தைக் கொண்டிருந்தது. சிறந்த நடிப்புக்கு உத்தரவாதமாக அமைந்த சிறுகளத்தூர் சாமா, விஸ்வாமித்திரராக நடித்தார். பி.எஸ். கோவிந்தன் -– ராமர், கே. எல்.வி. வசந்தா– சீதை, எம். ஆர். சந்தானலட்சுமி– அனுமனின் தாய் அஞ்சனாதேவி, டி. ஆர். மகாலிங்கம் – நாரதர் என்று நீண்ட பட்டியலில் அமைந்த நடிகர்கள், சிறப்பாகப் பாடக்கூடியவர்கள்!

பாபநாசம் சிவன் ‘பக்த ஹனுமா’னின் பாடல்களை எழுதினார். பாடல் வரிகளைத் தருவதோடு மெட்டுக்களையும் அவர் அமைப்பார் என்பதால்,   மகாதேவனுக்கு ஒரு திரை இசை மேதையை அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் இசையின் தியாகய்யர் என்ற அளவுக்குப் பின்னாளில் புகழ்பெற்ற சிவனுடன் பணியாற்றும் பாக்கியம், இசையமைப்புப் பயணத்தின் தொடக்கத்திலேயே மகாதேவனுக்குக் கிட்டியது.  திரைப் பாடல்களில் பாபநாசம் சிவனின் முத்திரை பலமாக விழுந்துகொண்டிருந்த காலத்திலும், மகாதேவனின் ஆற்றொழுக்கான இசைப் பாணியை, ‘பக்த ஹனுமா’னில் செல்லப்பா பாடிய சில பாடல்களில் நம்மால் யூகிக்க முடிகிறது.

தன்னுடைய தெய்வமான ராமருடன் போர் செய்யவேண்டிய தர்மசங்கடமான நிலை ஆஞ்சநேயருக்கு ஏற்படும் போது, செல்லப்பா பாடுகிற, ‘என்னுடைய ராகவனே, உன்னுடனோ போர்த் தொடுப்பேன்’  என்ற பாடல், இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. நெஞ்சை அள்ளும் கமாஸ் ராகத்தில், கவர்ச்சிகரமான நடையில் அது அமைந்தது. செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்த, பஜனைப் பாட்டின் அமைப்பில் உள்ள, ‘தசரத நந்தன ராம் ராம்’  பாடலும் அனைவரும் ரசிக்கக்கூடிய எளிமையான அழகு உடையதாக இருந்தது. இந்தப் பாடல்களை வி. ஏ. செல்லப்பா கிராமபோன் இசைத்தட்டுக்காக மீண்டும் பாடியதால், படப்பிரதி காணாமல்போன இந்தக் காலத்திலும் நம்மால் பாடல்களைக் கேட்க முடிகிறது, மகாதேவனின் இசையமைப்பை ரசிக்க முடிகிறது!

‘பக்த ஹனுமான்’ வந்த இரண்டு மூன்று ஆண்டுகளில், செல்லப்பா திடீரென்று மறைந்துவிட்டார். ‘பக்த ஹனுமான்’ வாய்ப்பை மகாதேவனுக்குத் தந்த சி.வி. ராமனும், 1947ல்  அகால மரணம் அடைந்தார். புதிய ஸ்டூடியோ அமைத்து, பல படங்கள் எடுக்க பெரிய திட்டங்களைத் தீட்டி வைத்திருந்த ராமனின் மறைவு மகாதேவனை சோர்வுறச் செய்தது.  

இந்தக் காலகட்டத்தில், மகாதேவன் இசையமைத்த அடுத்த படம்,  ‘தன அமராவதி’ (1947). மகாதேவனின் செறிவான இசைக்காக இந்தப் படம் பேசப்பட்டது. அதன் சிறந்த அம்சங்களைப் பட்டியலிட்ட ‘குண்டூசி’ பத்திரிகை, சங்கீதம், கதை அம்சம், ஹாஸ்யம் என்று ‘தன  அமராவதி’யின் சிறப்புகளை அடுக்கியது. சிறுகதை எழுத்தாளரும் திரைப்பட கதை, வசனகர்த்தாவுமான பி. எஸ். ராமய்யா, கதை எழுதி, தானே இயக்கிய படம் ‘தன அமராவதி’.  விக்ரமாதித்யன் மீது தன அமராவதி காதல் கொண்ட பின்னர், வருகிற இடையூறுகளை இருவரும் சேர்ந்து முறியடிப்பதுதான் கதை. ஆனால் மாறுபட்ட சம்பவங்கள், வேறுபட்ட பாத்திரங்கள், அழகான பாடல்கள்  படத்தை ஜனரஞ்சகமாக்கின.

இசைத்துறையுடன் சம்பந்தப்பட்ட சில குறிப்பிடும்படியான விஷயங்கள், ‘தன அமராவதி’யிலே இருந்தன. பின்னணிப் பாடல் முறை வரத்தொடங்கிய 1947ல், வைக்கம் சரஸ்வதி என்ற சிறந்த கர்நாடக இசைப் பாடகியை இந்தப் படத்திலே பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்தார் மகாதேவன். வைக்கம் சரஸ்வதி ‘தன அமராவதி’யில் பாடிய பாடல்கள் இன்று அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லை. ஆனால் அவர் பாடிய ஓரிரு தனி இசைத் தட்டுக்களில், அவருடைய அழுத்தமான, கம்பி போன்ற குரலையும்  உச்சரிப்புத் தெளிவையும் இனிமையையும் அனுபவிக்க முடிகிறது.

அதே போல், பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகரான வி. என். சுந்தரம்,  ‘தன அமராவதி’யில் பாட்டி வேடத்தில் நடித்து, மகாதேவன் இசையில் சில நல்ல பாடல்கள் பாடினார். ‘தன அமராவதி’தான் சுந்தரம் பாடி நடித்த கடைசி படம். அதன் பிறகு, பின்னணிப் பாடகராக மாறி திரைப்படங்களில் சில பாடல்களை அவர் பாடினார். ‘தன அமராவதி’யில்   சுந்தரம் பாடிய, ‘எண்டிசையும் வணங்கி ஏத்தும் பராசக்தியே’,  மிக அருமையான ஹரிகாம்போதி ராகப் பாடலாக அமைந்தது. மகாதேவனின் இன்னிசையில், சுந்தரத்தின் கம்பீரமான குரல் வளமும், கச்சிதமான சங்கீதப் பிடிகளும்  அழகாக முன்னின்றன. பின்னாளில் மகாதேவனைப் பற்றி என்னிடம் நினைவு கூறும்போது, சுந்தரத்தின் கண்கள் பனிக்கும். மகாதேவனின் நட்புணர்வைப் பற்றியும் அவர் தனக்குச் செய்த உதவிகள் குறித்தும் நெகிழ்ந்துபோய் பேசுவார்.

நடிப்பால் மட்டுமின்றி, சொந்தக் குரலில் பாடிய பாடல்களாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் சந்திரபாபு. ‘தன அமராவதி’ படத்தில், மகாதேவனின் இசை யமைப்பில் தான், சந்திரபாபு தன்னுடைய முதல் திரைப்பாடலைப் பாடினார்.   பெண்ணாக மாற்றப்பட்ட விக்ரமாதித்யன் பின்னே அலைந்து,  ‘உன்னழகுக் கிணை என்னத்தை சொல்வது’   என்ற பாடல்தான் அது. காமெடிப் பாடல் என்றாலும் அதற்கும் ஒரு இனிமையை நல்கினார் மகாதேவன்.  ஆனால், எல்லாம் இருந்தும் ‘தன அமராவதி’ வெற்றி பெறவில்லை. ‘என் பணி நல்ல இசையமைப்பைக் கொடுப்பதே’ என்று முன்னே நடந்தார் மகாதேவன்.

(தொடரும்)