வாமனனின் ‘நிழலல்ல நிஜம் – 15

பதிவு செய்த நாள்

15
மார்ச் 2016
00:19

பாடிய இசையமைப்பாளர்களும் வாடிய பாடகர்களும்!

தொலைக்காட்சி வராத எழுபதுகளின் தொடக்க ஆண்டுகளில் வானொலிதான் எல்லாம். வானொலியில் திரைப்பாடல் நிகழ்ச்சிகளுக்குப் பெரிய வரவேற்பு இருந்த காலத்தில், நட்சத்திரங்கள் வழங்கும் சிறப்புத் தேன் கிண்ணங்களுக்கு ஒரு தனி மவுசு. இந்த வரிசையில், ஒரு பின்னணிப் பாடகர், சிறப்புத் தேன் கிண்ணம் வழங்கினார். இசையமைப்பாளர்கள் பாடிய திரைப்பாடல்கள் என்பதுதான் அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு. அந்தப் பின்னணிப் பாடகர், சங்கீதம் தெரிந்ததுபோலவே இங்கிதமும் தெரிந்தவர். சிறந்த  இசையமைப்பாளர்கள் மீது மரியாதையும் உள்ளவர். 

ஆனால் குரல் வளம் கொண்ட பாடகர் என்பதால், இசையமைப்பாளர்கள் தங்கள் அளவை அறிந்துகொண்டு அதிகம் பாடக்கூடாது என்ற எண்ணமும் அவருக்கு உள்ளுக்குள்ளே இருந்தது. இசையமைப்பாளர்கள் பாடிவிடுகிற போக்கால், அவருடைய பாடும் வாய்ப்புகளும் அப்போது குறைந்திருந்தன. இன்னொரு நிகழ்ச்சி. பிரபல பாடகர் டி. எம். சவுந்தரராஜன் இசை நிகழ்ச்சிகள் நடத்த தென் ஆப்ரிக்கா சென்றிருந்த நேரம். 

சிவாஜிக்கான ‘பாலூட்டி வளர்த்த கிளி’ என்ற பாடலை இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் தானே பாடி பதிவு செய்துவிட்டார். அதை வைத்துக்கொண்டு படப்பிடிப்பும் நடத்திவிட்டார்கள். சவுந்தரராஜன் சென்னை திரும்பியதும் அவரை அழைத்து பாடலைப் போட்டுக்காட்டினார் விஸ்வநாதன். 

‘‘நீங்க நல்லாத்தான் பாடியிருக்கீங்க. ஆனா அவர் நடிப்பு  எங்கோ இருக்கு..உங்க பாட்டு எங்கோ இருக்கு..அவர் நடிப்புக்கு இன்னும் பொருத்தமா...’’ என்று இழுத்தார் டி.எம்.எஸ்.

‘‘அப்போ நீங்களே பாடிடுங்க,’’ என்று மிக்ஸர் அறைக்குள் விரைந்தார் விஸ்வநாதன். அது வரையில் சவுந்தரராஜன் பாட்டுக்குத்தான் சிவாஜி நடிப்பார். இந்தப் பாட்டில், சிவாஜியின் நடிப்புக்கு டி.எம்.எஸ். பாடினார். பாடிவிட்டு விஸ்வநாதனின் ஆமோதிப்பைப் பெற மிக்ஸர் அறைக்கு விரைந்தார் டி.எம்.எஸ்.

ஆனால் அதற்குள் ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து வெளியேறி விட்டிருந்தார் எம்.எஸ்.வி.! நிராகரிக்கப்பட்டது அவர் குரல் அல்லவா! பின்னணிப் பாடகர் தன் குரலை நிர்தாட்சண்யமாக விமர்சனம் செய்ததைப் பொறுக்க முடியாமல் இசையமைப்பாளர் துரிதம் காட்டிய நிகழ்ச்சி இது.

மற்றுமொரு நிகழ்ச்சி. அதே இசையமைப்பாளர் பாடிய பாடலை, ‘உடனே நிறுத்துங்க’ என்றார் வேறொரு பிரபல பாடகர். இசையமைப்பாளர் குரலில் இருக்கும் பிசிர் தன் குரலில் ஒட்டிக்கொண்டுவிட்டால் என்ன செய்வது என்ற கவலை பாடகருக்கு!

மேற்படி இசையமைப்பாளர் கற்றுத் தந்த எத்தனையோ மெட்டுக்களை கிரகித்து வெற்றி அடைந்தவர்தான் அவரும். ஆனால் தன்னுடைய கரம் ஓங்கியிருக்கும் போது அதே இசையமைப்பாளரின் பாட்டுக்குரலை கேட்க சகிக்காதவராக இருந்தார்.

இசை அமைப்பாளர்களின் பாட்டுக்கு அவர்கள் பாட வைக்கிற பின்னணிப் பாடகர்களிடம் இருந்தே இப்படி எதிர்ப்பு கிளம்பியதுண்டு.  

அதற்காக இசை அமைப்பாளர்கள் பாடாமல் விட்டார்களா என்ன? திரை இசை எங்கும் அவர்களின் பாட்டு முத்துக்கள் விரவிக் கிடக்கின்றன.

குரலின் மேல் மினுக்கைத் தாண்டி இசையின் செறிவை ரசிக்கத் தெரிந்த வர்களுக்கு ஞானமுள்ள இசை அமைப்பாளர்களின் பாட்டு பிடிக்கத்தான் செய்யும்.

பாடல்களுக்கு மெட்டமைக்கும் போது விஸ்வநாதன் பாடுவதைக் கேட்டு அங்கீகரிப்பார் எம்.ஜி.ஆர். ஆனால் பாடல் பதிவுக்குப் பின், ‘நீ பாடிக் காட்டின மாதிரி இல்லை’ என்று அங்கலாய்ப்பார். பின்னணிப் பாடல் பதிவின் போது, பாடகரின் குரலில் சில இசை அழகுகள் நழுவிவிட்டன என்பார். இப்படி இசையின் நுணுக்கங்களை ரசிப்பவர்கள், இசைப் படைப்பாளி பாடும் போது மதிக்காமல் போவார்களா?

‘ருக்மாங்கதன்’ என்ற படத்தினுடைய இசையமைப்பின் போது, இசை அமைப்பாளர் ஜி. ராமநாதன், பாடல்களைப் பாடிக் காட்டிக்கொண்டிருந்தார். படத்தின் நாயகரான பிரபல கர்நாடக இசைப் பாடகர் ஜி.என்.பி, தன்னுடைய நண்பர்களுடன் வந்திருந்தார். 

அப்போது ஜி.என்.பியின் ஒரு நண்பர் அவரிடம் கூறினார் -- ‘‘ராமநாதன் ஸார் காட்டுகிற உணர்ச்சியில் இருபது சதவிகிதமாவது வாங்கிப்பாடப்பா.’’ அப்படி உணர்ச்சி ததும்ப பாடுபவர் ராமநாதன்.

இதை இன்றும் பல பாடல்களில் நேரடியாக நாம் கேட்கலாம். 1000 தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணியின் பிரதி பரவலாகக் கிடைக்கிறது. இந்த வெற்றிப் படத்தில் ஒரு முனிவராகத் தோன்றி, ‘நல்லதை சொல்லிடுவேன் - அதை நயமுடன் கேட்டிடுவீர்’ என்ற அருமையான பாடலைப் பாடுகிறார் ஜி. ராமநாதன்.

நாயகனுக்கும் அவனுடைய நண்பனுக்கும் அறிவுரையும் அறவுரையும் முனிவர் கூறுவதாகக் காட்சி.  தேஷ், செஞ்சுருட்டி,  சிந்து பைரவி, சாமா, மோகனம் ஆகிய கவர்ந்திழுக்கும் இனிமையான ராகங்களில் அருமையாகப் பாடினார் ராமநாதன். சின்ன, எளிமையான வரிகள் வசீகரமான நாத வார்ப்பில் அமைந்தன.

மாடர்ன் தியேட்டர்ஸின் ‘பொன்முடி’யில், கதாநாயகன் நரசிம்ம பாரதிக்கான பாடல்களை ராமநாதனே பாடினார். பாடல்கள் வெற்றி அடைந்தன.

பாரதியின் ‘கூலி மிகக் கேட்பார்’ என்ற கவிதையை (கண்ணன் என் சேவகன்), தானே இசையமைத்து ‘நல்ல தங்கை’ (1955) என்ற படத்தில் பாடினார் ராமநாதன். ஒரு பாரதிப் பாடலுக்கு உயிரோட்டமான இசை கிடைத்தது.

கே.வி. மகாதேவன், தானே ஒரு பாகஸ்தராக இருந்து தயாரித்த ‘அல்லி பெற்ற’ பிள்ளை என்ற படத்தில், ஜி. ராமநாதனை பாட வைத்தார். ‘எஜமான் பெற்ற செல்வமே’ என்ற அந்தப் பாடல் இன்றளவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒரு குதிரை தன்னுடைய எஜமானின் மகனைத் தாலாட்டுவதுபோல் அமைந்த அந்தப் பாடல், ‘பகுளாபரணம்’ என்ற ராகத்தில் மிக உருக்கமாக ஒலிக்கிறது. 

பாடல் பதிவின் போது அங்கே இருக்க நேர்ந்த நடிகையும் பாடகியுமான  எஸ். வரலட்சுமி, ‘எஜமான் பெற்ற செல்வமே’ தொடும் உணர்வுகளால் உந்தப்பட்டு கண்களை துடைத்துக் கொண்டிருந்தார். இத்தனை ஜீவனா ஓர் இசையமைப்பாளரின் குரலில் என்று அதிசயித்தார்.

ஜி. ராமநாதனைப் பாட வைத்த கே.வி. மகாதேவன் எப்போதாவது பாடினார். இன்றைக்கும் எல்லோரும் காணக்கூடிய ‘மதனமோகினி’யில், பி. லீலாவுடன்  ‘கண்ணோடு கண்ணாய் ரகசியம் பேசி’  என்று காதல் டூயட் பாடுகிறார் மகாதேவன். 

பின்னணிப் பாடகர் வந்து சேராததால் மகாதேவனே களத்தில் இறங்கினார் என்று உடன் பாடிய லீலா என்னிடம் தெரிவித்தார். எப்படியும், ‘மதனமோகினி’யின் 13 பாடல்களில் நான்கு பாடல்கள் மகாதேவன் குரலில் ஒலித்தன. ஆனால், இசையமைப்புடன் அவர் பாடவும் செய்தது, தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான். திரையில் பாடவேண்டும் என்ற உந்துதல் அவருக்கு இல்லை.

ஆனால், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அப்படி இல்லை. அவர் உள்ளூரப் பாட விரும்பியவர். பின்னணிப் பாடகர்களைப் போல் ஜனரஞ்சகமான குரல் தனக்கு அமையவில்லையே என்று தனிமையில் அழுததுண்டு என்று என்னிடம் கூறியிருக்கிறார். 

முதலில் பாடல்களுக்குத் தேவையான ஹம்மிங் போன்றவற்றை செய்து வந்தார் (எடுத்துக்காட்டாக, தாழையாம் பூ முடிச்சு, பாலிருக்கும் பழமிருக்கும்,  என்னை எடுத்துத் தன்னை கொடுத்து). பிறகு முழுப்பாடல்களைப் பாடினார். அப்படி அவர் பாடிய பாடல்களில் பளிச்சென்று முதலில் ஒலித்தது, ‘முகமத் பின் துக்ளக்’ படத்தின் டைட்டில் பாடலான ‘அல்லா அல்லா’. 

அன்றைய அரசு, ‘முகமத் பின் துக்ளக்’கை முஸ்லிம் விரோத படம் என்று சித்தரித்து, தடைக்கு உள்ளாக்கப் பார்த்தது. அதற்கு எதிர்வினையாகத்தான் அல்லா பாடலை அமைக்கச் செய்தார் சோ. யார் பாடலாம் என்ற கேள்வி எழுந்தபோது, முகமத் ரபி, கண்டசாலா என்று தொடங்கிப் பலவாறாக சிந்தித்தார், படத்தின் இசை அமைப்பாளர் எம்.எஸ்.வி. 

எம்.எஸ்.வியே பாடவேண்டும் என்று நினைத்த சோ, சீட்டுக் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுக்கலாம் என்றார். அப்படிச் செய்தபோது எம்.எஸ்.வி. பெயர்தான் வந்தது. ஏனென்றால் எல்லா சீட்டுக்களிலும் அவர் பெயரையே எழுதியிருந்தார் சோ! பாடல் பெரிய வெற்றி அடைந்தது, சோ பயன்படுத்திய உத்தி சரிதான் என்று காட்டியது.

எம்.எஸ்.வி.யின் குரல் உணர்ச்சிபூர்வமானது. வடக்கே ஒலிக்கும் எஸ்.டி. பர்மனை நினைவுபடுத்துவது. ‘எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே’ (சிவகாமியின் செல்வன்),   ‘யாருக்கும் வாழ்க்கை உண்டு’ (தாய்வீட்டுச் சீதனம்) போன்ற   பாடல்கள், மற்ற பாடகர்கள் தொடமுடியாத இடங்களைத் தொட்டன. அது எம்.எஸ்.வி. குரலும் பாடும் பாணியும் தந்த வரம்.

இன்பம் (‘ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்’), துன்பம் (‘நாராய் நாராய் செங்கால் நாராய் - என்றோ புலவன்’), காதல் (‘சொல்லத்தான் நினைக்கிறேன்’), சமூக சிந்தனை (‘குடும்பம் ஒரு கதம்பம்’),  தத்துவம் (‘இக்கரைக்கு அக்கரை பச்சை’) என்று பல வண்ணங்களை அவர் பாடிய பாடல்கள் பிரதிபலித்தன. அவர்  நூறு பாடல்கள் பாடினார் என்ற எண்ணிக்கையை விட, பல ஆண்டுகள் தாக்குப்பிடிக்கக்கூடிய பல சிறந்த பாடல்கள் பாடியிருக்கிறார் என்று கூறுவது தகும். 

அவர் கண்ணதாசனின் கிருஷ்ண கானத்தில் பாடிய ‘அமர ஜீவிதம்’ பாடலை அவரிடமே பாடிக்காட்டும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. மகிழ்ச்சி அடைந்தவர், இந்தப் பாடலைக் கேட்கும் போது சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வு வருவதாக ஒரு ரசிகர் சொன்னார், என்றார். 

இசையமைப்பாளர் வி. குமாருக்கு எம்.எஸ்.வி. பாடிய வெற்றிப் பாடல், ‘உனக்கென்ன குறைச்சல்’ (வெள்ளி விழா). பின்னாளில், எஸ்.பி.பியின் இசையமைப்பில், எஸ்.பி.பியும் இளையராஜாவும் எம்.எஸ்.வியுடன் இணைந்து பாடிய  நட்பு பாடலும் மறக்க முடியாத ஒன்று (‘வானுக்கு நிலவோடு - உன்னை சரண் அடைந்தேன்’).

அதிகத் தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தவர் என்ற சாதனையுடன், அதிகத் திரைப்பாடல்கள் பாடிய இசையமைப்பாளர் என்ற ரிக்கார்டும் இளையராஜாவை சாரும். ஆரம்ப காலத்திலேயே அவருக்கு வெற்றி தந்த பாடல் ‘ஜனனி ஜனனி’ (தாய் மூகாம்பிகை).  அவரைப் பாடவேண்டாம் என்று படத்தின் இயக்குநர் கே. சங்கர் மறித்தும் அதை மீறி தடம் பதித்தார் இளையராஜா. 

எண்பதுகளில் இளையராஜா ஒருவரே இசையமைப்பில் மகாராஜா என்ற நிலை வந்ததும், ‘எங்கள் படத்தில் நீங்கள் பாடித்தான் ஆகவேண்டும்’ என்று அவரை நாடிய தயாரிப்பாளர்கள் அடம் பிடித்தார்கள் ! அவர்களுக்கு இளையராஜா இடம் கொடுத்தார். 

பல திரைக்கட்டங்களுக்கான பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்  நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடினார். இளையராஜா ரசிகர்களுக்கு அவர் குரலமுதம் பிடிக்கத்தான் செய்தது. எனக்கு அவர் பாடியதில் பிடித்தது, ‘ஓடம் ஒன்று காற்றில் போனவழி நாமும் போகின்றோம்’ என்ற பாடல். அனைவரும் மறந்துவிட்ட ‘திரிபுரசுந்தரி’ என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். 

ஏ. ஆர். ரஹ்மானும் அவ்வப்போது பாடியிருக்கிறார். அதுதான் சரி. ‘அரபுக் கடலோரம்’ கெத்தாக ஒலித்தது. ‘தாய் மண்ணே வணக்க’மும் அப்படித்தான். ஆனால் நியூயார்க் நகரம் மாதிரியான பாடல்கள், டெக்னோ கலவைகளாக அமைந்தன.   

குரலினிமையின் மாய்மாலங்களையும் எந்திரங்களின் ஆர்ப்பாட்டங்களையும் மீறி, உணர்வுகளை அள்ளி வரும் இசைப் படைப்பாளிகளின் குரல்கள் மீண்டும் வரும். அதுவரை நினைவுகளே போதும். மற்றபடி வேறு சில இசையமைப்பாளர்களும் எப்போதாவது பாடத்தான் செய்தார்கள். அவர்களின் பட்டியல் அல்ல இந்தக் கட்டுரை.

(தொட­ரும்)