தென் ஆப்பிரிக்கா: அதிபர் ராமபோசா தலைமையில் காந்தி நினைவு பேரணி

பதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2018 18:31

ஜோகன்ஸ்பர்க்,

   தென் ஆப்பிரிக்காவில் தெற்கு ஜோகன்ஸ்பர்க்கில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான லெனசியாவில், காந்தி நினைவு பேரணி அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் நடந்தது.


மக்களிடையே உலக சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இப்பேரணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தென் ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் காந்தியின் நினைவாக ஒரு மையக் கருத்துடன் காந்தி பேரணி நடத்தப்படுவது வழக்கம். இது 33வது ஆண்டு காந்தி பேரணி என காந்தி பேரணி அமைப்பின் தலைவர் அமித் பாரூசரண் கூறினார்.

கடந்த பல ஆண்டுகளாக முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்த காந்தி பேரணியில் கலந்து கொண்டாலும் பதவியில் இருக்கும் அதிபர் ஒருவர் இப்பேரணியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும் என்றும் பாரூசரண் தெரிவித்தார்.

அதிபர் ராமபோசா, தென் ஆப்பிரிக்காவுக்கான இந்திய தூதர் ருசிரா காம்போஜ், அமெரிக்க சமூக ஆர்வலர் ஜெசி ஜேக்சன் உள்ளிட்டோர் 12 கி.மீ. தூரமுள்ள காந்தி பேரணியை துவக்கி வைத்தனர்.