பாகிஸ்தானில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான முதல் பள்ளிக்கூடம் இன்று துவங்கியது

பதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2018 18:20

லாகூர்,

     பாகிஸ்தான் லாகூர் நகரில் மூன்றாம் பாலினத்தவர்க்கான முதல் பள்ளிக்கூடம் இன்று துவங்கியது. இந்த பள்ளியில் மூன்றாம் பாலினத்தவர்கள் 12ம் வகுப்பு வரை படிக்கலாம்.


தி ஜென்டர் கார்டியன் ஸ்கூள் (The Gender Guardian school) என்றழைக்கப்படும் இந்த பள்ளிக்கூடத்தை ஈஎப்எப் (EFF) எனப்படும் எக்ஸ்ப்லோரிங் ஃப்யூட்சர் பவுன்டேஷன் (Exploring Future Foundation) என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் துவங்கியுள்ளது.

இந்த பள்ளிக்கூடத்தில் பாடம் மட்டுமன்றி சமையல், பேஷன் டிசைனிங் போன்ற 8 விதமான தொழிற்கல்வியும் பயிற்றுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிக்கூடத்தின் உரிமையாளரான ஆசிப் ஷாசத் செய்தியாளர்களிடம் கூறுகையில்

‘‘பாகிஸ்தான் லாகூர் நகரில் சுமார் 30,000 திருநங்கைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள். சிறு வயது முதலேயே பெற்றோர்களை பிரிந்து தனிமையில் வாடுகிறார்கள். அவர்கள் வளர்ந்த பின் ஆடி பாடி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்’’

‘‘அத்தகைய திருநங்கைகள் அனைவரும் சிறந்த கல்வி அறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த பள்ளிக்கூடம் துவங்கப்பட்டது. அவர்களும் மற்றவர்கள் போல் வாழ முடியும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறோம்’’

‘‘இந்த பள்ளிக்கூடத்தில் 15 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் மூன்று பேர் திருநங்கைகள். இந்த பள்ளியில் சேர வயது வரம்பு இல்லை. இதுவரை 40 பேர் இந்த பள்ளியில் சேர்ந்துள்ளனர். பாகிஸ்தானில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக செயல்படும் ஒரே பள்ளிக்கூடம் இது’’ என ஆசிப் ஷாசத் தெரிவித்தார்.

தி ஜென்டர் கார்டியன் பள்ளிக்கூடத்தில் படிப்பை முடித்த திருநங்கைகளுக்கு சுயமாக தொழில் துவங்க தேவையான நிதி உதவியையும் இந்த தொண்டு நிறுவனம் வழங்கும். தற்போது இந்த பள்ளியில் சேர்ந்த திருநங்கைகளில் பெரும்பாலானவர்கள் பேஷன் மற்றும் அழகு கலையில் அதிக ஈடுபாடு காட்டுவதாக ஈஎப்எப் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மூவிசா தாரிக் செய்தியாளர்களிடம் கூறினார்.