ஓய்வுபெற்ற எம்பிக்களுக்கான சலுகைகளை எதிர்க்கும் வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2018 17:59

புதுடில்லி

    ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.


அரசியலமைப்பு சட்டத்தின் 14 ஆவது பிரிவுக்கு எதிராக ஓய்வுபெற்ற எம்பிக்களுக்கு ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக லோக் பிரஹாரி என்ற என்ஜிஓ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் அவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற சலுகைகளை சட்டம் இயற்றப்படாமல் வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற எம்பிக்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதர கொடுப்பனவுகள் ஆகியவற்றில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசுதெரிவிக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இது குறித்து பரிசீலனை செய்துவருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆகையால் மத்திய அரசின் நிலைப்பாட்டை மார்ச் 7ஆம் தேதியன்று தெரிவிக்கவேண்டும் என்றும் அறிவித்தது

இதைத்தொடர்ந்து, ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் கண்ணியம் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும். ஆகையால், அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் சலுகைகளை வழங்குவதில் தவறில்லை என்று மத்திய அரசு தரப்பு உச்சநீதிமன்றத்திடம் கடந்த மார்ச் 7 ஆம் தேது பதிலளித்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே,செல்லமேஸ்வர் மற்றும் சஞ்ஜய் கிஷன் கவுல் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஓய்வுபெற்ற எம்பிக்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அரசியலமைப்பு சட்டத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.